Asianet News TamilAsianet News Tamil

பேரிடர் காலத்திலும் கரப்ஷன் -கமிஷன் -கலெக்‌ஷன்.. மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்துங்க.. ஸ்டாலின் சாடல்..!

மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

AIADMK government is steeped in corruption...mk stalin
Author
Tamil Nadu, First Published Jun 23, 2020, 5:51 PM IST

மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, உச்ச நீதிமன்றம், மருத்துவர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் புறக்கணித்து, மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொல்லி, இப்போது கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிக் கைவிரிக்கும் தமிழக ஆட்சியாளர்கள், மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

AIADMK government is steeped in corruption...mk stalin

சீனாவிலிருந்து 'ரேபிட் கிட்' வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றைத் திருப்பி அளிப்பதாகச் சொல்லிச் சமாளித்த ஆட்சியாளர்கள், இப்போது 'தெர்மல் ஸ்கேனர்' வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக ஊருக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டி வைப்பதைப் போல, சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகி, உயிர்ப்பலிகளும் கூடிக்கொண்டிருக்கிற அச்சம் மிகுந்த சூழலில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நிலைமை கடுமையாக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொரு வீடாக சென்னை மாநகராட்சிக் களப்பணியாளர்கள் நேரில் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து 'பிகே58பி' என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்திருப்பதை தமிழ் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிலுள்ள ஊழல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

AIADMK government is steeped in corruption...mk stalin

இந்த தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச (எம்ஆர்பி) விலை ரூபாய் 9,175 ஆகும். மொத்தமாகக் கொள்முதல் செய்த காரணத்தால் விலைக் குறைப்பு செய்து, ஒரு கருவியின் விலை 4,000 முதல் 6,000 என்ற அளவில் வாங்கியிருக்க முடியும் என மருத்துவப் பணி சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையைவிடக் குறைவான விலையில், 2,000 ரூபாயில் தொடங்கி 5,000 ரூபாய் வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாக 1,500 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வாங்கியுள்ளனர். மொத்தமாக, வாங்கும்போது இதைவிடக் குறைவான விலையில் வாங்க முடியும் என்றும், சீனத் தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன என்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரைச் சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்பநிலையையும் இந்த தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவைக் கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய்த் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள்.

AIADMK government is steeped in corruption...mk stalin

எத்தனை பேரிடம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது என்பதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு களப்பணியாளர்களுக்கு இருப்பதால், இதனை எப்படிப் பதிவேற்றுவது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். உயரதிகாரிகளோ, நீங்கள் பரிசோதிக்காவிட்டாலும் பரவாயில்லை; ஆய்வு நேரங்களில் கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பெயரளவுக்கு, தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்யோசனையோ தெளிவான திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படைத்தன்மையோ இல்லாமல், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுவதைப் பல முறை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியபிறகும், அவற்றைத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி, எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகச் சொல்லி, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன.

வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்படுகிறோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களிடம் சொல்கிறார். ஆனால், அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள முகக்கவசம் ஒன்றின் விலை 15 ரூபாய் என 'பில்' போடப்பட்டுள்ளது. 1,000, 2,000 என மொத்தமாக முகக்கவசம் வாங்கும்போது, அடக்க விலை 3 ரூபாய் அளவில்தான் வரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். 500 ரூபாய் விலையுள்ள ஒரு லிட்டர் கிருமிநாசினியை 2,500 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கிருமி நாசினியைத் தெளிப்பதற்கான 8,000 விலையுள்ள பவர் ஸ்பிரேயரை, 22,500 ரூபாய் என 'பில்'லில் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் அந்த இதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

AIADMK government is steeped in corruption...mk stalin

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியமான அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கும் தலா 1 என வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களுக்காக செலவிடப்பட்டிருப்பது 2 லட்சத்து 68 ஆயிரத்து 922 ரூபாய். அதாவது, ஒரு தெர்மல் ஸ்கேனர் விலை ரூ.7,909 என்றாகிறது. சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள தெர்மல் ஸ்கேனர்களைவிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியத்தில் வாங்கிய ஸ்கேனர்கள் விலை அதிகம் என்பதையே இது காட்டுகிறது.

இதுபற்றி விரிவாக எழுதியுள்ள வார இதழ், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மன்றத் தலைவர்கள், இந்த அநியாயக் கொள்முதலைக் கண்டித்து, சரியான விலைக்கு 'பில்' அனுப்பினால் மட்டுமே காசோலை கொடுப்போம் என்று தெரிவித்திருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது. அநியாய கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதுடன், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

AIADMK government is steeped in corruption...mk stalin

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, மக்களின் உயிரோடு மரண விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios