ஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், "ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைய வேண்டும். அனைவரும் தவறாமல்  வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது. 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் மக்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், முக ஸ்டாலின் அளித்த பேட்டி தேர்தல் விதிகளை மீறிய செயல் என அதிமுக தலைமை, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதிமுகவின் சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் அளித்துள்ள புகாரில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், மத்திய மாநில அரசுகள் மீது ஏற்கனவே கூறிய தவறான குற்றச்சாட்டுகளை இன்றும் கூறி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் என வாக்களர்களை எண்ணத்தை திசை திருப்ப பார்த்துள்ளார். ஆளும் கட்சியினர் பணம் விநியோகிப்பதாகவும், அதற்கு அடிமையாகி ஓட்டளிக்கக்கூடாது என்றும் தவறான முறையில் பேட்டி அளித்துள்ளார்.

தேர்தல் நாளில் அளித்துள்ள இந்த பேட்டி இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி தவறாகும். எனவே ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது உறுதி என்பதால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.