அதிமுக செயற்குழு கூடியுள்ள நிலையில் தலைமைக் கழக அலுவலகம் ஓ.பி.எஸ் படம் போட்ட மாஸ்க் அணிந்து அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் மாஸ் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் களை கட்டியது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தில் உள்ள பரபரப்பான சூழலில், அதிமுக செயற்குழு கூடியுள்ளது. இதில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி போட்டியில் இறங்கி உள்ளதாகவே தெரிகிறது. இதனால் செயற்குழு நடைபெறும் ராயப்பேட்டை தலைமைக் கழகம் முன்பும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் திடீரென 100-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் படம் போட்ட மாஸ்க்குகளை அணிந்து திடீரென மாஸ் காட்டியதால் ஒரே பரபரப்பானது. அவர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினர். சமூக இடைவெளியுடன் 3 தளங்களில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் அழைப்பிதழுடன் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் வேட்பாளர், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது, சசிகலா விவகாரம் போன்றவை குறித்து சூடான விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.