அதிருப்தியில் மா.செக்கள்... நேராக அழைத்து சமாதானம் செய்யும் பிரேமலதா...! தப்பிக்குமா தேமுதிக..!
அதிமுகவிடம் 4 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பிரேமலதா அமைத்து கூட்டணி அந்த கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
அதிமுகவிடம் 4 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பிரேமலதா அமைத்து கூட்டணி அந்த கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
திமுகவும் 4 தொகுதிகளை கொடுக்க முன்வந்த நிலையில் அவமானப்பட்டு அதிமுகவிடம் சென்று 4 தொகுதிகளை பிரேமலதா வாங்கியதன் பின்னணில் பலமான பேரம் இருப்பதாக செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. இந்த தகவலை அறிந்த மாவட்டச் செயலாளர்கள் எப்போதுமே தேமுதிக கூடடணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு இப்படி ஒரு தகவல் வெளியாவது ஏன் என்று கட்சி தலைமையை கேட்க ஆரம்பித்துள்ளனர். நெருப்பில்லாமல் புகையாது என்கிற பழமொழியை சுட்டிக்காட்டி பார்த்தசாரதியிடம் மாவட்டச்செயலாளர்கள் பலரும் பொங்கி தீர்த்து வருகிறார்கள்.
இந்த தகவலை பார்த்தசாரதி அப்படியே அண்ணியாரிடம் தெரிவிக்க, அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று களம் இறங்கியுள்ளார். அதன்படி அதிருப்தியில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் சிலரை பிரேமலதா வீட்டிற்கே நேரில் அழைத்து பேசியுள்ளார். திமுக நமது கட்சியை அழிக்க நினைக்கும் கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்தாலும் உள்ளடி வேலை பார்த்து நம்மை கவிழ்த்துவிடுவார்கள் என்பது தான் மா.செக்களிடம் பிரேமலதா கூறும் முதல் விளக்கம். இரண்டாவது அவர்கள் நமது கல்யாண மண்டபத்தை இடித்தவர்கள் அவர்களுடன் எப்படி கூட்டணி வைப்பது என்று மா.செக்களிடம் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் வழக்கம் போல் பதில் சொல்லாமல் மா.செக்கள் அமைதியே காக்கின்றனர். இதன் பிறகு பிரேமலதா கூறும் தகவல்கள் தான் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு பூஸ்ட்டாக உள்ளது. நாம் போட்டியிடாத தொகுதிகளில் நமது கட்சி மாவட்டச் செயலாளர்களுக்கு என்று ஒரு டீல் பேசப்பட்டுள்ளது. அதன் படி நமது கூட்டணி வேட்பாளர் பட்டியலை அறிவித்த உடன் உங்களை வந்து வேட்பாளர்கள் சந்திப்பார்கள் அதன் பிறகு தேர்தல் செலவுக்கான தொகையும் ஒரே நேரத்தில் செட்டில் செய்யப்படும் என்று பிரேமலதா கூறும் தகவல் சில மாவட்டச் செயலாளர்களை கவர்ந்துள்ளது.
அதிலும் அதிமுக தொகுதிகளில் கூடுதலாக கவனிப்பார்கள் என்கிற ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே சமயம் சில மாவட்டச் செயலாளர்கள் இதற்கெல்லாம் மசிவது போல் இல்லை. பிரேமலதா பேசி அனுப்பும் போது எல்லாம் சரி தான் ஆனால் நாம் நான்கு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டதை தொண்டர்கள் யாரும் ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டே செல்கின்றனர். இதனால் அதிருப்தியில் உள்ள தேமுதிக நிர்வாகிகளுக்கு வழக்கம் போல் திமுக வலை விரிக்கும் என்கிறார்கள்.