கடந்த 15 நாட்களாக அமைதியாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மூலமாக கட்சியில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிடி தளர்ந்து விட்டதாக கூறப்பட்டது. டெல்லியில் பாஜக மேலிடத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டி இங்குள்ள அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் வளைத்துப் போட்டதாகவும் சொல்லப்பட்டது. தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் சென்ற ஓ பன்னீர்செல்வம் இறுதியில் எடப்பாடியின் தலையீட்டால் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது. 

இருந்தாலும் கூட மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி என்கிற உத்தரவாதத்துடன் தான் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. 

ஓபிஎஸ் மகனை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மோடி அமித்ஷா விரும்பியதாகவும் ஆனால் உள்ளடி அரசியல் மூலம் எடப்பாடி இதனை கெடுத்து விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால் டெல்லி உடனான தொடர்பு எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் ஒற்றை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பகிரங்கமாக பேட்டி அளித்தார். 

ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவர் பேசியது போல் தெரிந்தாலும் முழுக்க முழுக்க அந்தப் பேச்சு பன்னீர்செல்வத்திற்கு எதிரானது தான் என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். தொடர்ந்து பெரம்பலூர் குன்னம் ராஜேந்திரனும் ஒற்றைத் தலை மிக ஆதரவாகக் குரல் கொடுக்க அவர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக வெளிப்படையாகவே பேசினார். மகனை மத்திய அமைச்சராக ஓபிஎஸ் முயற்சி மேற்கொண்டு அதை சுட்டிக்காட்டி கழகத்தை மீண்டும் குடும்பத்திற்குள் கொண்டு செல்ல முயற்சி செய்தால் சசிகலாவிற்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று ஓபிஎஸ்சை மறைமுகமாக விமர்சித்தார்.

டெல்லியின் நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தில் பன்னீர்செல்வத்திற்கு எதிராக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களை தூண்டிவிடும் பணியை எடப்பாடி தொடங்கியுள்ளதாகவும் இதுகுறித்து மேற்கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள். 

சரி எடப்பாடி என்ன தான் செய்கிறார் என்று பார்ப்பதற்கு மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டதாக கூறுகிறார்கள். எனவே 12ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.