தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 9 இடங்களில் அதிமுகவும், 13 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்தும், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்கு கொண்டு வருவதாக முயற்சிகள் நடைபெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  

இதேபோல் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.