திமுகவில் இருந்து அதிமுகவிற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம்.ஆண்டிபட்டி தாலூகா கடமலைக்குண்டு அருகே முத்தலாம்பாறையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (38). இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்செல்வன் கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 8 வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. திமுக, அதிமுக தலா 7 இடங்களில் வென்றிருந்தன அப்போது, கவுன்சிலர் தமிழ்செல்வன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு அணி மாறினார். இதனால் அதிமுக வசம் ஒன்றியம் போனது.

இந்நிலையில், தமிழ்செல்வன் அண்மைக்காலமாக கடன் தொல்லையில் இருந்து வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த தமிழ்செல்வன் கடந்த டிசம்பர் 31ம் தேதி திடீரென பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவுன்சிலர் தமிழ்செல்வன் உயிரிழந்தார். கடமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.