Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் வாக்குறுதியை மீறிய திமுக.! குடியிருப்புகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்திடுக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

AIADMK co-ordinator ops has demanded an immediate halt to the eviction of slum dwellers in Chennai
Author
Tamilnadu, First Published May 9, 2022, 10:57 AM IST

தேர்தல் வாக்குறுதியை மீறிய திமுக

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வீடுகள் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும், சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டாவழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றெல்ல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கெல்லாம் முற்றிலும் முரணான  வகையில், சென்னை, இராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. . நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை (வழக்கு எண். 844-846/2015) திரு. ராஜிவ் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மொத்தமுள்ள 625 குடியிருப்புகளில் 356 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 259 குடியிருப்புகளைப் பொறுத்த வரையில், அவை அனைத்துமே இளங்கோ தெருவின் கிழக்குப் பகுதியில், அதாவது பக்கிங்காம் கால்வாய்க்கு எதிராக உள்ளது என்றும், அவர்கள் 50 ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும், அந்தப் பகுதி குடிசைப் பகுதி என்று 1973 ஆம் ஆண்டே அறிவிக்கை செய்யப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இருப்பதால் அவர்களை காலி செய்ய முடியவில்லை என்றும் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

AIADMK co-ordinator ops has demanded an immediate halt to the eviction of slum dwellers in Chennai

குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக அதிமுக

மேலும், இந்த வழக்கின் மனுதாரரான திரு. ராஜிவ் ராய் என்பவர், - பொது நலன் என்ற போர்வையில் சொந்த நலனுக்காக நீதிமன்றங்களை அணுகுகிறார் என்றும், தன்னுடைய சொத்து மதிப்பினை உயர்த்திக் கொள்வதற்காக இவ்வாறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த அவமதிப்பு வழக்கில், ஆறு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 25-10-2021 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மீண்டும் 4-2-2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து பொதுப் பணித் துறை சார்பில் 259 குடும்பங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு, அங்கு இப்போது இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 20 வீடுகள் இடிக்கப்பட்டு விட்டதாகவும், திரு. கண்ணையா என்பவர் தீக்குளித்து இறந்துவிட்டதாகவும், இது போதாதது என்று பக்கத்து தெருவில் உள்ள வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமென்று பொதுத் பணித் துறை உதவிப் பொறியாளர் கூறுவதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் ஆகியோரின் அணுகுமுறை சரியில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. மேற்படி பொருள் குறித்து அப்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது, அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அரசு உரிய வழிவகை செய்யும் என நான் பதில் அளித்து இருந்தேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தவரை, குடியிருக்கும் ஏழை மக்களை ஆதரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பதோடு, அவர்களுடைய வீடுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் மொத்தம் · 625 குடியிருப்புகள் உள்ளன. இதில் தெற்கு பக்கிங்காம் கரையை ஒட்டி, இளங்கோ தெருவின் மேற்கில் 366 குடியிருப்புகள் உள்ளன. கரைக்கு எதிராக, இளங்கோ தெருவின் கிழக்கே 259 குடியிருப்புகள் உள்ளன. இதில், இளங்கோ தெருவின் மேற்கில் உள்ள 336 குடியிருப்புகள் பக்கிங்காம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததால் அவை அகற்றப்பட்டு விட்டன.

AIADMK co-ordinator ops has demanded an immediate halt to the eviction of slum dwellers in Chennai

குடியிருப்பு அகற்றும் பணியை நிறுத்த வேண்டும்

மீதமுள்ள 259 குடியிருப்புகள், இளங்கோ தெருவிற்கு கிழக்கே உள்ளன. இந்தப் பகுதி குடிசைப் பகுதி என 1973 ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் அகற்றுதல் சட்டம், 1971-68TL அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதிகளை De-notify செய்ய சட்டத்தில் வழிவகை இல்லை. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அவர்களும் 9-3-2022 கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டார். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏழையெளிய மக்களுக்கு எதிராக வந்துவிட்டது நான் இந்த அரசைக் கேட்டுக் கொள்வதெல்லாம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்புப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும், இளங்கோ தெருவின் கிழக்கே உள்ள 259 குடியிருப்புகள் 'குடிசைப் பகுதி' என 1973ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதையும், மேற்படி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததே தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தான் என்பதையும் அவர்கள் அனைத்துவிதமான வரிகளையும் அரசாங்கத்திற்கு செலுத்தி வருகிறார்கள் என்பதையும், அந்தக் குடியிருப்புகள் சாலையையோ அல்லது பக்கிங்காம் கால்வாயையோ ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பதையும் அரசின் சார்பில் ஒரு மனு மூலம் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தெரிவித்து, ஏழையெளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், காவல் துறையையும் மீறி குடியிருப்பு வாசிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சரை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios