"முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி தமிழகத்துக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதை உணர்ந்துதான் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். காலப்போக்கில் அதிமுக திமுகவில் சங்கமம் ஆகிவிடும்” 

அதிமுகவில் உள்ள தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டார்கள். இதுதான் அக்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமே என்று அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்றது. அதிமுக படுதோல்வியை அடைந்தது. தேர்தல் தோல்வியால் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தை திமுக வென்றது போல முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் மாநகராட்சியில் உள்ள 23-ஆவது வார்டிலும் திமுகவே வென்றது. அதேபோல எடப்பாடி நகராட்சியையும் திமுக கைப்பற்றியது. கோவை அதிமுகவின் கோட்டை என்று அதிமுக சொல்லும் நிலையில் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் பேரூராட்சி உள்பட மாநகராட்சி, 10 நகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்ற சேலத்தில் கே.என். நேரு, கோவையில் செந்தில் பாலாஜி, தருமபுரியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரை திமுக களமிறக்கி வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் தோல்வி குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30 முதல் 40 சதவீத இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதிமுகவில் உள்ள தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டார்கள். இதுதான் அக்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமே.

தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 80 சதவீத வாக்குகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக விழுந்தவைதான். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி தமிழகத்துக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதை உணர்ந்துதான் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். காலப்போக்கில் அதிமுக திமுகவில் சங்கமம் ஆகிவிடும்” என்று ஐ. பெரிய்சாமி தெரிவித்தார்.