கிட்டத்தட்ட ‘அந்நியன்’ விக்ரம் போல் ஆகிவிட்டார் நாடாளுமன்ற  துணை சபாநாயகரான தம்பிதுரை. சில மாதஙக்ளுக்கு முன், ‘ஸ்டாலினை சமாதானம் செய்வதற்காக பல காரியங்களை செய்கிறது பி.ஜே.பி.’ என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அதற்கு உதாரணமாக சில சம்பவங்களையும் குறிப்பிட்டார். இந்த நேரத்தில் டென்ஷனான ஸ்டாலின் ‘வகுப்புவாத பி.ஜே.பி.யுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை.’ என்று ஓங்கியடித்தார்.

 

அவமானப்பட்ட பி.ஜே.பி. தம்பிதுரையின் மீது பாய்ந்து பிறாண்டியது, கூடவே அ.தி.மு.க. மேலிடத்திலும் அவர்கள் புகார் சொல்ல, ‘அண்ணா கொஞ்சம் அமைதியா இருங்களேன்!’ என்று எடப்பாடியாரே இறங்கிவந்து தம்பிதுரைக்கு வாய்ப்பூட்டு போட்டார். இதையடுத்து பி.ஜே.பி.யை கூல் செய்யும் விதமாக சில விஷயங்களைப் பேசி தன் கேரக்டரையே மாற்றினார் தம்பிதுரை. இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. இதோ இப்போது மீண்டும் ‘அந்நியன்’ ஆகி, பி.ஜே.பி.யை தூக்கிப் போட்டு பந்தாடத் துவங்கிவிட்டார் தம்பி. 

அதுவும் சாதாரண வார்த்தைகளில் இல்லாமல், தமிழக பி.ஜே.பி.யின் தன்மானத்தையே நோண்டிப் பார்க்குமளவுக்கு நெத்தியடியாக சில கருத்துக்களையும், சவால்களையும் சகட்டுமேனிக்கு வீசியுள்ளார் தம்பி. அதாவது “திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல், தனித்து நின்று அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆனால் அதேவேளையில் இப்போது திருவாரூர் இடைத்தேர்தலென்பது தேவையில்லாத ஒன்று. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் திருவாரூர் தொகுதியும் ஒன்று. அங்கே புணரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கே இடை தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் நிவாரணப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழா நடைபெறும் நேரத்தில் தேர்தலை நடத்துவது சரியா? இதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.” என்று ஒரு விளாசு விளாசியவர்.

பின் பி.ஜே.பி. பக்கம் திரும்பி, “தமிழ்நாட்டில் இன்னும் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு திருவாரூரில் மட்டும் நடத்துவதன் பின்னணி புரியவில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி.தான் இனி ஆட்சிக்கு வரும் என்று தமிழிசை தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். அதை உண்மை என்று நிரூபிக்க, திருவாரூர் தொகுதியில் பி.ஜே.பி. தனித்து நின்று வெற்றி பெறட்டும் பார்க்கலாம். இதை செய்ய தமிழிசை தயாரா? தமிழகத்தில் தேசியக்கட்சியான பி.ஜே.பி.யின் ஆட்சிதான் அமையப்போகிறது என்று தமிழிசை கூறி வருகிறார். 

அப்படிப்பட்ட நிலையில் தேர்தலில் பி.ஜே.பி.யுடன் நாங்கள் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்பது சரியான தகவலல்ல.” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைக்க பி.ஜே.பி. முடிவெடுத்துள்ளது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் எனும் நிலையில் அ.தி.மு.க.வின் தலை உள்ளது.

15 இடங்கள் ஒதுக்கிட கேட்டு இறுதியில் 12 இடங்கள் ஓ.கே.வாகியுள்ளன, சமீபத்தில் டெல்லி சென்ற வேலுமணி மற்றும் தங்கமணி இருவரிடமும் கூட்டணி குறித்த தகவல்களை பேசியுள்ளது டெல்லி லாபி, கூடிய விரைவில் தமிழக முதல்வரே டெல்லி சென்று பிரதமர் வட்டாரத்தை சந்திக்க உள்ளார்! என்றெல்லாம் தகவல்கள் படபடத்துக் கிடக்கும் நிலையில், தம்பிதுரையின் இந்த பேச்சு இரு தரப்பையும் அதிர வைத்துள்ளது. இவரது பேச்சு எடுபடாது! என்று சிலர் வாதம் வைத்தாலும் கூட, ‘தில்லு இருந்தா தனியா நின்னு ஜெயித்துக் காட்டு. எங்க முதுகுல ஏறாதே!’ என்று பி.ஜே.பி.க்கு தம்பிதுரை விட்டிருக்கும் சவால் அசாதாரணமானது மட்டுமல்ல மோடியின் தன்மானம் சம்பந்தப்பட்டதும் கூட.