ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக விரும்புகிறது என்பதை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி நிரூபித்திருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்தக் கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற உள்ளன. ஆனால், ஆளும் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்படு வருகிறது. அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. அதற்கெற்ப அதிமுக கூட்டணி அமைக்கும் என்று சில அமைச்சர்களும் பேசி வருகிறார்கள். 

‘கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக’ அமைச்சர் ஜெயக்குமாரும் அழைப்புவிடுத்தார். இன்னொரு புறம் பாஜக கூட்டணிக்கு எதிராக தம்பிதுரை உள்ளிட்டோர் பேசிவரும் போக்கும் அதிகரித்துள்ளது. இதற்கு தமிழக பாஜகவினர் பதில் கூறுவதும் தொடர்கிறது.  இருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘அதிமுக-பாஜகவினர் ஒருவருக்கொருவர் எதிர்த்து பேசிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். 

இதற்கிடையே தற்போதைய அதிமுக பலவீனமாக இருப்பதாக ஒரு கருத்து பொதுவெளியில் நிலவுகிறது. அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு சசிகலா - தினகரன் தரப்பினர் அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிப்பார் என்றும் கூறப்படுகிறது. தினகரனின் ஓட்டுப் பிரிப்பு திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகிவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

எனவே அதிமுகவுடன் தினகரனை இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே  நேற்று புதுச்சேரியில் அளித்த பேட்டி அதை உறுதுபடுத்தியது.  “பாஜக கூட்டணியில் அதிமுக இணைவது உறுதி. அதற்கு முன் அதிமுக, அமமுக இணைப்பு நடக்க வேண்டும். இதன்பின் பாஜக கூட்டணியில் ஒன்றுபட்ட அதிமுக இருக்கும். பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும். அமமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும்” என்று பேசிவிட்டு சென்றுள்ளார். 

ஏற்கனவே அதிமுக, அமமுக இணைப்பு குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ‘அமைச்சர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் இணைப்பு சாத்தியமாகும்’ என்று சில வாரங்களுக்கு முன்பு அமமுகவின் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சரின் பேட்டியும் உற்று நோக்க வைத்திருக்கிறது.