வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக உள்ள நிலையில்  சிகிச்சை பெறும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். 

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான  செய்தியை அறிந்து நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று விசாரித்தார். அதன்பின்னர், மருத்துவமனை அறிக்கையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருப்பது சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளதால் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் கருவி மூலம் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவலைக்கிடமாக உள்ள துரைக்கண்ணு உடல்நிலை குறித்து கேட்டறிய அமைச்சர் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.