புயல் பாதித்த பகுதிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. இதில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தென்னை, மற்றும் நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாமலும், பயிர்கள் சேதமடைந்தது கண்டு மனஉளைச்சலில் இருந்த விவசாயிகள்  தற்கொலை செய்துகொண்டனர். 

புயல் பாதித்த பகுதிகளில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூறியுள்ளார். 

மேகதாது தடுப்பணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் என ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மீறி மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என விளக்கம் அளித்துள்ளார். 

கஜா புயல் பாதிப்பை அரசியலாக்க சில எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். கஜா புயல் இதுவரை வந்த புயல்களை விட மிக தீவிரமானது, சேதமும் அதிகமானது எனவும் கூறியுள்ளார். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் குறைந்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.