Agamam training to work without pay - H. Raja Challenge!

கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கேரள அரசு பரிந்துரை செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கும் தலைவர்கள், தங்கள் குழந்தைகளை ஆகம பயிற்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸம் போர்டின் கட்டுப்பாட்டின்கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸம் வாரியத்துக்கு உண்டு. அதன்படி, பிராமணியர் அல்லாத 30 பேரும், பிராமணர்கள் 26 பேரும், தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டனர்.

கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும்.

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். 

நடிகர் கமல் ஹாசன், மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், கேரள அரசுக்கு பாராட்டு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், கேரள அரசின் நடவடிக்கை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், தலித் உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கேரள இடது முன்னணி அரசின்
நடவடிக்கை தமிழக முற்போக்கு இயக்கங்கள் வரவேற்றுள்ளது. நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

டி.கே. ரங்கராஜனின் டுவிட்டர் பதிவுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

கேரள அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ள ஹெச். ராஜா, ஆனால், இதனை வரவேற்கும் தலைவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகளை ஆகம பயிற்சி பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் டுவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார். ஹெச். ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.