ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரேவால் வெற்றி பெற முடியாது என பாஜக சவால் விடுத்துள்ளது.  மராட்டியத்தில் பல்வேறு அரசியல் அதிரடி  திருப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா,  தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது .  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார் . மூன்று கட்சிகளை சேர்ந்த 6 பேர் மந்திரிகளாக அவருடன் பதவியேற்றனர்.  வரும் 3 ஆம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க  உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

சனிக்கிழமையான இன்று  சட்டசபை கூடுவதாகவும் பிற்பகலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் உள்ள 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் அரசு வெற்றிபெற 145 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தங்களிடம் 166 எம்எல்ஏக்கள் உள்ளனர், எனவே வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கருத்து கூறி வருகின்றனர்.  இன்று சட்டசபையை  நடத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்சே பாட்டில் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று பிற்பகல் 2 மணி அளவில் மராட்டிய சட்டமன்றம் கூடுகிறது அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் மராட்டிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் பாட்டில் அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமான முறையில் நடத்தினால் உத்தவ் தாக்கரே வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது .  இதை நான் வெளிப்படையாக அடித்துச் சொல்கிறேன், சவாலாகவும் சொல்கிறேன் என அதிரடி காட்டியுள்ளார் இது சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கிடையில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.