* சமீபத்தில் தன்னை கிட்டத்தட்ட ’சைஸ் ஜீரோ’ மற்றும் ‘நோ மேக் - அப்’ஸ்டைலில் போட்டோஸ் எடுத்து அப்லோடி அதிரவிட்டவர் காஜல் அகர்வால். அதுமட்டுமில்லாமல் தனக்கு ஆன்மிகத்தில் நாட்டமுடைய நபர்தான் கணவராக வரவேண்டும்! என்றும் தடாலடி பேட்டி தட்டினார். ஈஷா யோக மையத்துடன் தன்  தோழி தமன்னாவை போலவே நெருங்கிய தொடர்பை வைத்தும் இருக்கிறார். இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் காஜலுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம். ‘இந்தியன் 2’ முடிந்த பின் அநேகமாக காஜலுக்கு கல்யாணமாக இருக்கலாம். 
(கண்டாங்கியை மறந்துடாத புள்ள)

* பேட்ட, தர்பார்! என்று இரண்டு படங்களிலும் தாடியுடனே நடித்தார் ரஜினி. காரணம், முதுமையால் அவரது முகம் ஒடுங்கிவிட்டதே காரணம்! என்கிறார்கள். ஆனால் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினி க்ளீன் ஷேவ் செய்துவிட்டுதான் நடிக்க வேண்டி இருக்கிறதாம். இதற்காக சற்றே தன் உடல் எடையை அதிகரிக்கிறாராம். அதற்காக அரிசி, கோதுமை உணவுகளில் இருந்து விலகி நின்றவர் இப்போது மீண்டும் அவற்றை எடுக்க துவங்கியிருக்கிறாராம். ஆனால் பேட்ட் படத்தில் ‘ஃபிளாஸ்பேக் காட்சிகளில் அவர் ஷேவ் செய்து, பெரிய மீசையுடன் தானே நடித்திருந்தார்! ஆக அவர் முகமெல்லாம் சுருங்கவில்லை.’ என்று ஒரு டீம் எதிர் கருத்து வைக்கிறது. (சரி சரி விடுங்கப்பா, அந்த பெரிய மனுஷனை படுத்தி எடுக்காதீக)

* சினிமா துறைக்கு கமல்ஹாசன் வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அவரது நிறுவனமான  ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் அவரது கட்சியான  மக்கள் நீதி மய்யம் ஆகியன இணைந்து பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கு தயார் செய்துள்ளன. கமலுக்கு முழு மனது இல்லாவிட்டாலும், அன்பு நெருக்கடியால் இதில் பங்கேற்க சம்மதிக்கிறாராம். (நம்பிட்டோம் பாஸு. சினிமாவில் கேமராவை நோக்கி கருத்து சொல்லி நடிக்காத கமல், அரசியலுக்கு வந்ததும் எப்படில்லாம் மாறிட்டார்)

* விஜய்காந்தின் உடல் நிலையில் கவனிக்கத்தக்க முன்னேற்றம். அவரால் யாருடைய உதவியுமின்றி சில நிமிடங்கள் நிற்க முடிகிறது, மற்றவர்கள் புரிந்து கொள்ளும் படி சில நிமிடங்கள் ஓரளவு பேசவும் முடிகிறது. இதனால் அவருக்கு அரசியலை விட சினிமா ஆசை மீண்டும் வந்திருக்கிறதாம். ரஜினி, கமல், அர்ஜூன், ராஜ்கிரண் என்று அவர் காலத்து போட்டியாளர்கள் இண்டஸ்ட்ரியில் இன்னும் கலக்கிக் கொண்டிருப்பதை பார்த்து உருவான பொறாமை கலந்த ஏக்கம் என்கிறார்கள். (வா கேப்டன் வா கேப்டன்)

* விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து கலக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்க படம் ஏப்ரலில் வெளியாகிறது. விஜய் இப்போதைக்கு இந்த ஒரு படத்தில்தான் கவனம் செலுத்துகிறார். ஆனால் விஜய் சேதுபதிக்கோ இதில் நெகடீவ் ரோல், இதை முடித்துவிட்டு அடுத்த படங்களில் தன்  ஹீரோயிஸ ஆட்டங்களை நடத்த வேண்டி இருப்பதால், மனிதர் லோகேஷை நெருக்கடி செய்கிறாராம் தன் போர்ஷனை சீக்கிரம் முடிக்க சொல்லி. (விஜய்சேதுவுக்கு இதில் ஜோடி ஆண்ட்ரியாவாமே!)