2,400 கி.மீ பயணித்து ருத்ர தாண்டவம் ஆடிய ‘ஓகி புயல்’....கடந்த 40 ஆண்டுகளுக்குபின் முதல்முறையாக நிகழ்ந்தது

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக வங்காள விரிகுடா கடலில் 2,400 கிலோமீட்டர் பயணித்து குஜராத் கடல்பகுதி வரை ‘ஓகி புயல்’ ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது என்று வானிலை மைய அதிகாரி ெதரிவித்துள்ளார்.

ஓகி புயல்

வங்காள விரிகுடா கடலில் கடந்த நவம்பர் 29ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக மாறியது. இதற்கு ஓகி புயல் எனப் பெயரிடப்பட்டது.

இந்த புயல் நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை கடற்கரைப்பகுதிகளை தாக்கி, கேரளா கடற்கரை வழியாக குஜராத் கடற்கரைக்குள் டிசம்பர் 6-ந் தேதி சென்று வலுவிழந்தது.

500க்கும் மேற்பட்ட மீனவர்கள்

இந்த ஓகி புயலின் போது, ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனார்கள். இதேபோல கேரள மாநிலத்திலும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர்.

2,400 கி.மீ

இந்தநிலையில், ஓகி புயல் குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், “ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வங்காள விரிகுடா ஒரு தீவிரமான புயல்  உருவாகி அது கடலில் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணித்து அரபிக் கடலில், குஜராத் கடற்கரைக்குள் கலப்பது இப்போதுதான் நடந்துள்ளது. 

1922ம் ஆண்டு

இதற்கு முன் கடந்த 1922ம் ஆண்டு, வங்காள விரிகுடா கடலில் உருவான ஒரு புயல் 4 ஆயிரம் கி.மீ  பயணித்து ஏமன் கடற்கரையில் சென்று வலுவிழந்தது. மேலும், 1966ம் ஆண்டு நவம்பர் மாதம், 1977ம் ஆண்டு நவம்பர், 1978ம் ஆண்டு நவம்பர் ஆகிய ஆண்டுகளில் வங்காள விரிகுடா கடலில் புயல் உருவாகிய 3 ஆயிரம் கி.மீ பயணித்து, அரபிக் கடலில் கலந்துள்ளது.

இயல்பைக்காட்டிலும்

ஆனால், அப்போது உருவான புயல்கள் தமிழகத்தை கடந்தபோது, 10 டிகிரி வடக்கு திசையாக சென்றதால், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பாதிப்புகள் ஏதும் இருந்தது இல்லை. ஆனால், ஓகிபுயல் கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. வடகிழக்கு பருவமழையில் கன்னியாகுமரியில் 42 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 23 சதவீதமும் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.