மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக முன்னாள் மகளிர் அணியினர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தனர்.
முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவர் நலம் பெற தினம் தோறும் அனைத்து மதத்தின்பரும் பிரார்த்தனையில் ஈடுபடுவதால் அப்போலோ மருத்துவமனை வளாகம் சர்வ மத பிரார்த்தனை கூடமாக மாறி உள்ளது. இது தவிர தமிழகம் முழுதும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் முதலமைச்சர் நலம் பெற பூஜைகள், வேண்டுதல்கள் , மண் சோறு சாப்பிடுவது, அலகு குத்தி கொள்வது, பால் காவடி எடுப்பது போன்ற பல்வேறு வகைகளில் வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி , பாத்திமா பாபு உள்ளிட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டி கொண்டனர்.
இன்று காலை 7-30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா , பாத்திமா பாபு மற்றும் முன்னாள் மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 10 க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் வடபழனி முருகன் கோவிலில் முதலமைச்சர் நலம் பெற வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
இதில் கோகுல இந்திரா அங்கப்பிரதட்சணம் செய்யவில்லை. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு முன்னர் கோவிலில் முதல்மைச்சர் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.
