அ.தி.மு.க.வை பற்றி எவன் என்ன கேட்டாலும் முண்டியடித்துக் கொண்டு பதில் சொல்பவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தான். அவரது திடீர் பதற்ற புலம்பலின் பின்னணியில் ஒரு பெரிய குட்டு அம்பலமாகியுள்ளது.
 
அதாவது, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான சுதாகர் ஒரு தடாலடி அறிக்கை வெளியிட்டார். அதில் “தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், மன்றத்தின் கொடி, தலைவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்க கூடாது. மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அதில்  ரஜினியின் உத்தரவை கூறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் “உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை எனும் அறிவிப்பு, கமலுக்குதான் ஏமாற்றம் அளிக்கும்.” என்று ஒரு கருத்தை சொன்னார்.

இதை வைத்து அவரை சரமாரியாக விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அவர்கள் “இந்த உள்ளாட்சி தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவேயில்லை. இதை கமல் வெளிப்படையாக அறிவித்தே விட்டார். ’ஊழல் கட்சிகள் இரண்டும் எழுதி, இயக்கும் அரசியல் நாடகத்தில், எந்தப் பாத்திரத்தையும் நாங்கள் ஏற்க மாட்ட்டோம்.’ என்று சொல்லிவிட்டார். இது தெரிந்தும் கூட ஜெயக்குமார், ரஜினியின் ‘நோ ஆதரவு’ அறிவிப்பை கமலுக்கு எதிராக திசை திருப்புகிறார் என்றால் அதன் பின்னணியே வேறு. ஆக்சுவலாக ரஜினியின் அதிரடி அறிவிப்பால், ஏமாந்திருப்பது அ.தி.மு.க.தான்.” என்கின்றனர். 

எப்படி? என்று அந்த பின்னணியை விளக்கியவர்கள் “எதிர்வரும் வியாழக்கிழமை 12ம் தேதியன்று ரஜினியின் பிறந்த நாள். இந்த முறை அவர் நிச்சயம் அரசியல் கட்சியை துவக்குவார்! என்று அவரது ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை! என்பதை ரஜினி ஓப்பனாக சமீபத்தில் தெரிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரியளவில்  ஏமாந்து, மனம் நொடிந்தனர்.
 
கடுப்பில் இருந்த ரஜினியின் ரசிகர்களை, அவரது மன்ற நிர்வாகிகள் மூலமாக மிக லாவகமாக ஆளுங்கட்சி வளைக்க துவங்கியது. ’உங்க மன்றத்துல பல லட்சம் வாக்குகள் இருக்குது. அதை ஏன் வீண் பண்றீங்க. எங்களுக்கு ஆதரவு கொடுங்க, நீங்க ஆசைப்படுறதைப் பண்ணித் தர்றோம்!’ அப்படின்னு, அவங்க கனவுலேயும் நினைக்காத அளவிலான தொகையை கண்ல காண்பிச்சாங்க. 

ஆனா இதுக்கு ரஜினி மன்ற நிர்வாகிகள் மசியலை. ‘ஊழலை எதிர்த்துதான் எங்க தலைவரே அரசியலுக்கு வர்றார்! எங்ககிட்டேயே பணத்தை காட்டி இழுக்குறீங்களா?’ன்னு கேட்டாங்க. அதுக்கு அ.தி.மு.க. தரப்போ ‘உங்க தலைவர் இதுவரைக்கும் தான்  நடிச்சதுக்கான சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட பிளாக் மணியாக வாங்கலை, எல்லாமே அக்கவுண்ட்ல காட்டி, முறையா வரி கட்டிட்டாரா? இதை மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பார்ப்போம். அவரு வரி ஏய்ப்பு பண்ணாம இருக்கலாம், ஆனால் ஒயிட்டாக வாங்குன சம்பளத்துக்குதான் வரியை கட்டியிருப்பார். ஆனால் அக்கவுண்ட்ல வராம வாங்குன சம்பளத்தை பத்தி உங்களுக்கு தெரியுமா? அவர் அப்படி எவ்வளவு சம்பாதிச்சு, எங்கே முதலீடு பண்ணியிருக்கார்னு எங்களுக்கு தெரியும். அரசாங்கத்தை கையில் வெச்சிருக்கிற எங்களால் அதை ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சிருக்குது. அவரோட பிளாக் மணி முதலீடுகளை நாங்க போட்டு உடைக்கல்லாம் மாட்டோம். காரணம், அது அரசியல் தர்மம் கிடையாது. என்னதான் வெளியில் வீரமா டயலாக் பேசினாலும், எல்லாமே உள்ளுக்குள் சமரசம்தான். 

இதுதான் அரசியல். மேலும் உங்க தலைவர் (ரஜினி) ஒண்ணும் எங்க தலைவர் இ.பி.எஸ். மேலே கோபமாகல்லாம் இல்லை. தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கூட ‘ஆயிரம் விமர்சனம் செஞ்சிருந்தாலும், அதை மனதில் வெச்சுக்காம இந்த ஸ்டேடியத்தை வழங்கிய அரசுக்கு நன்றி’ன்னு எடப்பாடியாருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவர் எடப்பாடியார் கூட இணக்கமாகதான் இருக்கிறார். 

அதனால தேவைப்பட்டதை வாங்கிக்கிட்டு, உங்க மன்ற வாக்குகளை எங்க கட்சிக்கு திருப்பிவிடுங்க சைலண்டா. இன்னும் எத்தனை நாளைக்குதான் பைக்கு, பழைய மாடல் கார்னு சுத்துவீங்க? நாளைக்கே உங்க தலைவர் கட்சி துவக்கிட்டார்னா ஜம்முன்னு ஸ்கார்பியோ, இன்னோவான்னு போயி இறங்கவேண்டாமா?” அப்படின்னு சென்டிமென் டாகவும், ஆசை காட்டியும் தெளிவா வலை வீசி இழுத்துட்டாங்க. 

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்கவே  உள்ளாட்சி தேர்தல் நடக்கும் கிராமப்புறங்களில், ரஜினி ரசிகர்களின் வாக்குகளை ஆளும்தரப்புக்கு போடச்சொல்லி, பல மாவட்டங்களில் சில நிர்வாகிகள் கேன்வாஸ் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுவும் ரஜினியின் பெயர், மன்றத்தின் பெயர்லேயே இந்த பிரசாரம் துவங்குச்சு. ரசிகர்களை மட்டுமில்லாம, அவங்களோட குடும்பத்தின் மொத்த வாக்குகளையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவா போட்டச்சொல்லி வலியுறுத்தப்பட்டுச்சு. ஆனால், நேர்மையான ரசிகர்கள் சிலர் மூலமா இந்த தகவல் சுதாகரின் காதுக்கு போக, அவர் ரஜினியிடம் போட்டுக் கொடுத்துட்டார். 

’என்னோட நிர்வாகிகளையே, ரசிகர்களையே விலைக்கு வாங்குறீங்களா?’ அப்படின்னு டென்ஷனாகி அவரும் ‘யாருக்கும் ஆதரவு இல்லை’ன்னு அறிவிச்சுட்டார். தலைவர் மற்றும் மன்றத்தின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் நடவடிக்கை!ன்னு ரஜினி சொன்னதும் அவரோட ரசிகர் மன்ற நிர்வாகிகளும் பயந்து, ஆளும் தரப்பு ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கிட்டாங்க.

ரஜினி ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் தெம்பாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள துணிஞ்ச அ.தி.மு.க.வுக்கு இது பெரும் ஏமாற்றமாகிடுச்சு. ஆனாலும் வெளியில் ஓப்பனாக எதையும் சொல்ல முடியாத நிலை. அதனால்தான் திருடனுக்கு தேள் கொட்டினாற் போல் ‘ரஜினியின் அறிவிப்பு, கமலுக்குதான் ஏமாற்றம்.’ன்னு பிளேட்டை மாத்திப் போட்டிருக்காங்க. 

இதுதான் உண்மையான பின்னணி. இப்ப இன்னொன்னும் ஓடிட்டு இருக்குது. முதலில் ஓ.கே. சொன்ன ரஜினி மன்றத்தின் நிர்வாகிகளிடம் மறுபடியும் பேசும் அ.தி.மு.க.காரங்க ’சரி வெளியில் காட்டிக்காம, உள்ளுக்குள்ளே எங்களுக்கு ஆதரவா உங்க ரசிகர் மன்ற ஆளுங்கட்ட பிரசாரம் பண்ணுங்க. அப்படி பண்ணினா உங்க தலைவருக்கு தெரியவா போகுது? பிரதியுபகாரமா தேவைப்பட்டதை வாங்கிக்குங்க, எக்ஸ்ட்ரானாலும் பார்த்து தர்றோம்.’ ன்னு வலையை இன்னும் பெருசாக்கிட்டு இருக்கிறாங்க. ” என்றார்கள். 

சிக்குவார்களா ரஜினி மன்ற நிர்வாகிகள்.