admk symbol to which faction

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என்பதால் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டு அணிகள் செயல்பட்டன.

சசிகலா சிறைக்கு சென்றபிறகு தினகரன் தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும் பன்னீர்செல்வம் தரப்பும் போட்டி போட்டது. இரு அணிகளின் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

தினகரன் தலைமையின் கீழ் செயல்பட்ட முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து தினகரனை கழற்றிவிட்டு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. தங்கள் தரப்பு வாதத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தினகரன் தரப்பும் கோரியது.

இதையடுத்து பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் 2400 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தினகரன் தரப்பில் 1000 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இருதரப்பு வாதங்களையும் கடந்த விசாரணையின்போது தனித்தனியே கேட்டறிந்த தேர்தல் ஆணையம், இருதரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்துகிறது.

அதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அதேபோல் தினகரன் அணி தரப்பில் புகழேந்தி டெல்லி சென்றுள்ளார்.

தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை நடத்தப்பட வேண்டி உள்ளதால் இன்று பிற்பகல் நடக்கும் விசாரணையின் முடிவில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதித்தீர்ப்பை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.