தேனி தவிர பாராளுமன்றத் தொகுதிகள் அத்தனையும்  பற்கொடுத்த நிலையில் , சட்டசபை இடைத்தேர்தலில் நூலிழையில் உயிர் பிழைத்த நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்புமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில்,...தம்பிகளே வாரீர் தாய்வீடு அழைக்குது...என்ற தலைப்பில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. கூடாத இடம் சேர்ந்த கர்ணனை நினைத்துப் பார் எனத் தொடங்கும் அந்த கவிதையில், ஒரு நொடியும் தாமதிக்காது உடனே வந்து கழகம் சேர் என்று அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் - ஓபிஎஸ் இணைகரத்தால் அழைக்கும் அவ்வை சண்முகம் சாலைக்கு அன்போடு வந்து சேர் என்றும், திசை மாறிய பறவைகளே திரும்பி வந்து கூடுசேர் என்றும் அந்தக் கவிதையின் வரிகள் அமைந்துள்ளன. தீது வழி விட்டு தூய வழி திருந்திச் சேர் என்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கே திரும்புமாறு அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.

ஊர் ரெண்டுபட்டது ஓசி பிரியாணி கும்பலுக்குக் கொண்டாட்டம் என்பதை உள்ளத்தில் நிறுத்திப்பார்....மக்கள் திலகமும் மகராசி தாயும் மடிவளர்த்த இயக்கத்தை மாஃபியாக்கள் ஒரு நாளும் வழி நடத்த முடியாது என்பதை மனதார ஏற்று உளமாற வந்து சேர்’என்று மிரட்டி, கெஞ்சிக் கூத்தாடி அழைக்கிறது அக்கவிதை.