கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். 

கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பாக வன்முறையில் ஈடுபட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவையில் நாளை நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கையை எதிர்க்கட்சியினர் சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். கோவையில் எதிர்க்கட்சியினர் வன்முறை, கலவரத்தை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவிதமான வன்முறை நடந்தாலும் பொறுமையுடன் செயல்பட திமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், நாளை வன்முறை நடந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று அதிமக சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. அதிமுகவினர் மட்டும் தான் உள்ளனரா? என கவனித்து கூட்டத்தை நடத்தியுள்ளனர். கூட்டம் நடந்த மண்டபத்தின் கதவுகளை அடைத்துவிட்டு, பேசி இருக்கின்றனர்.

அப்போது, ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் அதிமுகவினர் 100 பேர் வர வேண்டும் என பேசி இருக்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டு இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சினைகள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்று உள்ளது. அதை போலவே, நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறும். வாக்குப்பதிவின் போது அதிமுக எம்எல்ஏ-க்களும் முன்னாள் அமைச்சர்களும், வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்ததால் அங்கிருந்த திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து திமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.