சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுகவுக்கு, அதில் சிக்கல் ஏற்பட்டால், ஆட்சியைத் தக்க வைக்க மீண்டும் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தை கையில் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின்  தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களில் பேசிவருகிறார். அது உண்மையும் கூடத்தான். ஆனால், திமுக 22 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே இது சாத்தியம். அதேவேளையில் அதிமுக 9 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


தற்போதைய நிலையில் அதிமுகவில் பலம் சட்டப்பேரவையில் 114 ஆக உள்ளது. ஆனால், இந்த 114 எம்.எல்.ஏ.க்களில் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் வெளிப்படையாக தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்களை கட்சியை விட்டு நீக்கினால், அவர்கள் எந்தக் கட்சியை சாராத உறுப்பினர்களாகவோ அல்லது தினகரனோடு சட்டப்பேரவையில் சேர்ந்து செயல்பட முடியும். அப்படி ஒரு நிலையை ஏற்படுத்த விரும்பாத அதிமுக. இவர்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ், தமீம்முன் அன்சாரி ஆகியோர் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளனர். இந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களையும் கழித்துவிட்டால், சபையில் அதிமுகவின் பலம் 109 ஆக உள்ளது. தற்போதைய சட்டப்பேரவை பலம் 212 என்பதால், ஆட்சியைத் தொடர 107 உறுப்பினர்களே போதும் என்பதால் நூலிழையில் அதிமுக ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு இந்த எண்ணிக்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக கடும் முயற்சிகளை செய்துவருகிறது. 9 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைப் பற்றி அதிமுக அலட்டிக் கொள்ளாது. ஒரு வேளை அதற்கும் குறைவாக வெற்றி பெற்றால், ஆட்சியைத் தக்க வைக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரையும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததுபோல தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.


அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டப்பேரவையின் பலம் 229 ஆக குறையும். அப்போது 115 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அதிமுக ஆட்சியைத் தொடர்லாம். அப்படி நடக்க வேண்டுமென்றாலும், இடைத்தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மே 23-ம் தேதி பிறகு தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு காத்திருக்கிறது.