தி.மு.க. எதிர்பார்த்தது போலவே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஆம்! மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிகளுக்கு தேர்தலை நடத்த விரும்பவில்லை அ.தி.மு.க.! என்று தி.மு.க. யூகித்து சாடியது. அது இன்று தேர்தல் ஆணைய அறிவிப்பின்  மூலம் பட்டவர்த்தனமாக வெளியாகிவிட்டது. 

வழக்கம்போல் மேயர், சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கும் சேர்த்து ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்கிற விவாதம் ஆக்ரோஷமாக எழுந்துள்ளது. அது தவிர்க்கப்பட காரணம், சிட்டி மற்றும் டவுன்  சைடு மக்களைக் கண்டு எடப்பாடி அரசு நடுநடுங்குவதே காரணம்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இதுபற்றி விரிவாக பேசும் அவர்கள்....”ஆக்சுவலாக இந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. எப்படியாவது இதை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்! என்பதே அவர்களின் எண்ணம். அதையும் தான் செய்துவிட கூடாது, எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு போவதன் மூலம் தடுக்கப்பட வேண்டும்! ஆனால் மக்கள் மத்தியில் தான் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டும்! என்று ஆசைப்பட்டது. 

இடியாப்ப சிக்கலான இந்த திட்டம் சாத்தியமாக வேண்டுமென்றால், ஒரே வழி குழறுபடியாக தேர்தலை நடத்துவதுதான். அதனால்தான் இப்படி மேயர், சேர்மன், யூனியன் சேர்மன் பதவிகளுக்கான தேர்தலை அறிவிக்காமல் வைத்துள்ளது. 

அ.தி.மு.க.வுக்கு எப்போதுமே கிராமப்புறங்களில்தான் அபரிமிதமான ஆதரவு இருக்கும். நகர் மற்றும் சிட்டி பகுதிகளில் தி.மு.க.வுக்கே ஆதரவு அதிகமிருக்கும். தி.மு.க. ஒருவேளை ஆளுங்கட்சியாக இருந்து, அவர்களின் ஆட்சியினால் அவஸ்தை பட்டிருந்தால், அதற்கு மாற்றாக அ.தி.மு.க.வை விரும்புவார்களே தவிர வேறு எந்த நிலையிலும் அக்கட்சியை விரும்ப மாட்டார்கள். 

எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று நம்பாத, ஏற்றுக் கொள்ளாத கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கில் இன்னமும் உள்ளனர். அதே போல்தான் ஜெயலலிதாவையும். ஆக இந்த கண்மூடித்தனமான கிராம வாக்குகள்தான் அ.தி.மு.க.வின் பலம். 

இப்போது அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கெல்லாம் இல்லை! அதிலும் பல்லாங்குழி சாலைகள், கடல் போல் குப்பை நாறும் வீதிகள், தெருவிளக்குகள் இல்லா நிலை,  சீரற்ற குடிநீர் விநியோகம், குழப்படியான போக்குவரத்து சீரமைப்பு என்று சிட்டி மற்றும் டவுன் மக்கள் ஆளும் கட்சியின் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். இதை ஆளும் அரசு தெளிவாக புரிந்து வைத்துள்ளது. இரு தொகுதி இடைத்தேதல்களில் எப்படி ஜெயித்தோம் என்பது அவர்களுக்கே தெரியும். இப்போது அத்தனை பதவிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மிக மிக மோசமான தோல்வி கிடைக்கும் என்பதை புரிந்து வைத்துள்ளனர். 

ஆனால், பானையில் சோறே இல்லாவிட்டாலும், தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆர். சின்னமான இரட்டை இலையில் குத்துவது கிராமத்து மக்களின் வழக்கம். எனவேதான் அந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துகின்றனர். 

இதுவே இந்த குழப்படி அறிவிப்பின் சூட்சமம். 
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த குழப்பமான தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட் சென்று தடை வாங்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நோக்கம். அதையும் மீறி தேர்தல் நடந்தால் கிராம மக்கள் தங்களுக்கு கை கொடுப்பார்கள்! எனும் தைரியம்.
வேறு எதுவுமில்லை.” என்று நிறுத்தினர். 
அப்படிங்களா எடப்பாடி சார்?!