ADMK MP Speech against Tamilnadu police at MGR Function

ஏன் பண்றோம்? எதுக்குப் பண்றோமுன்னே புரியாமல், தமிழக அரசு மாயந்து மாய்ந்து நடத்திக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 29-ம் தேதியன்று தஞ்சாவூரில் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. 

பொதுவாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஆள் சேர்க்கிறதுதான் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஸ்கூல் மாணவ, மாணவிகளை அழைத்து வரக்கூடாது என்று நீதிமன்றம் வேறு உத்தரவு போட்டிருப்பதால் கூட்டத்துக்கு வழியில்லாமல் புலம்பித் தவிக்கின்றனர். தேனியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தது போல் ‘பல்லைக்காட்டும் வெயில் அடித்துக் கொண்டிருக்க, மழை பொழிவை காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட தைரியம்’ எல்லா அமைச்சர்களுக்கும் கிடையாது. 

இதனால் எம்.ஜி.ஆர். விழாவில் வைத்து பரிசு தருகிறோம் என்று சொல்லி மாவட்டம் முழுக்கவே பல வகையான போட்டிகளை வைத்து வெற்றியாளர்களை டீம் டீமாக சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இதே போன்று சில போட்டிகள் தஞ்சை மாவட்டத்திலும் நடந்திருக்கின்றன. அப்போது அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.க்கள் பாரதிமோகன் ஆகியோரின் கார்களை மக்கள் முற்றுகையிட்டு சாலை பிரச்னை, தண்ணீர் பிரச்னை என்று ஏகப்பட்ட குறைகளைச் சொல்லி படுத்தி எடுத்துவிட்டனர். இந்த சம்பவம் நிகழும்போது போலீஸ் வந்து தடுக்கவில்லை என்பது கூடுதல் பிரச்னையாகி இருக்கிறது. 

மக்களை தூண்டிவிட்டு நம்மை டார்ச்சர் செய்வது தினகரன் டீமின் வேலைதான் என்று டோட்டல் காட்டத்தையும் தினா மீது காட்டியிருக்கிறார்கள் வி.ஐ.பி.க்கள். 

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது. அப்போது மைக் பிடித்த மாஜி அமைச்சர் வைத்திலிங்கம்...”நான் அரசியலுக்கு வர்றப்ப தினகரனுக்கு 8 வயசு. அப்போது அவருக்கு கட்சியோட சட்ட விதிகள் கூட தெரியாது. நான் அணில் மாதிரி கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுறேன். ஆனா தினகரன் செஞ்சது என்ன? இவரெல்லாம் என்னைப் பார்த்து துரோகி என்கிறார். ஆனா உண்மையான துரோகி யாருன்னு மக்களுக்கு தெரியும்.” என்றார். 

மக்களால் முற்றுகையிடப்பட்ட டென்ஷனில் இருந்த எம்.பி.யான பாரதிமோகனோ “அம்மா மறைவிற்குப் பின் நமது கட்சியின் நிலை மாறியிருக்கிற என அனைவரும் பேசத்துவஙிவிட்டனர். அதனால் தைரியமாக இருங்கள். 

போலீஸார் நமக்கு ஆதரவாக இல்லையெனில் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வேற எங்காச்சும் போகச்சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் அம்மாவுக்காக அமைதியாக இருந்தோம். இனி அப்படி கிடையாது.” என்று எகிறி குதித்திருக்கிறார். 
வைத்தியும், பாரதியும் குய்யோ முறையோ என குதிக்க, அமைச்சர் துரைக்கண்ணு எந்த சவுண்டும் விடாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.