admk mla want to join with dmk told stalin

ஸ்டாலின் மீது அனைத்து தரப்பினரும் (அவரது கட்சியினர் உட்பட) வைக்கும் விமர்சனம், ‘அசமந்தமாக அரசியல் செய்கிறார். ஜெயலலிதா மரணத்துக்கு பின்னான சூழலை பயன்படுத்தி தி.மு.க.வின் ஆட்சியை அமைக்க தவறிவிட்டார். கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கோட்டையில் குடியேறியிருப்பார்.’ என்பதுதான். 

ஆனால் இதற்கெல்லாம் விளக்கமாக, ‘மக்களின் அபிமானத்தை பெற்று மட்டுமே ஆட்சிக்கு வரும் தி.மு.க. தலைவர் கலைஞரும் அதையே விரும்புவார்.’ என்பதுதான். 

ஸ்டாலின் மீது அந்த ‘அசமந்தம்’ விமர்சனம் தொடர்ந்து கொண்டிருந்ததும், அதற்கு அவர் தரும் பழைய விளக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. 

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தை எதிர்த்து நடந்த திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில், ஒரு மர்மம் ஒன்றை உடைத்திருக்கிறார் ஸ்டாலின். அவரின் புதிர் வார்த்தைகளுக்கு விளக்க உரை எழுதும் விமர்சகர்களின் வாக்கியங்கள் பகீரென்றிருக்கின்றன. 

அந்த விளக்கம் இதுதான்...”பன்னீர் தர்மயுத்தம் எனும் பெயரில் கட்சியை பிளந்தபோது கணிசமான எம்.எல்.ஏ.க்கள் அவர் பக்கம் சாய்ந்தனர். அப்போது எடப்பாடி அணியானது மெஜாரிட்டியை இழக்கும் சூழல் உருவானது. பன்னீரை நம்பி பக்கம் சாயாமல் இருந்த அவரது விரோதி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியுடனும் ஒட்டாமல் அமைதியாக தனி நிலை எடுத்தபடியிருந்தனர். 

அந்நேரத்தில் ஆட்சியை கவிழ்த்து, கோட்டையில் கொடி நாட்டும் மூவ்களில் ஸ்டாலின் இறங்கியிருக்கிறார். சாணக்கியத்தனமாக செயல்பட்டு ஆட்சியை கலைக்க அவர் யோசித்த வேளையில், அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகி ஒருவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அவர், தி.மு.க.வுக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொள்வல்தாகவும் ஆனால் அதற்கு உடன்படும் எம்.எல்.ஏ.க்களுகு மிகப்பெரிய ஆதாயம் ஒன்றை ஸ்டாலின் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அந்த ஆதாயம் தி.மு.க.வை பொறுத்தவரையில் அவ்வளவு பெரிய அதிர்ச்சிகரமான தொகையில்லைதான். ஆனாலும், அவரை அனுப்பிவிட்டு கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் இதை யோசித்த ஸ்டாலின் ஒரு அதிரடி முடிவுக்கு வந்தார். அதாவது ‘வாழ்க்கை தந்த கட்சியின் ஆட்சியை குழப்பமான சூழலில் கவிழ்த்துவிட்டு, பரம எதிரியான நம்முடன் கைகோர்க்க முயலும் இவர்களை நம்பி ஆட்சியமைத்தால், நாளைக்கு எப்படி மக்கள் நல திட்டங்களை இவர்களை நம்பி இயற்ற முடியும்? மக்கள் நல செயல்பாடுகளுக்கு அக்கறையுடன் கைகொடுக்க மாட்டார்களே!

அப்படியொன்றும் இவர்களை இணைத்து ஆட்சி அமைக்க தேவையில்லை. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.’ என்று அந்த முயற்சியையே தவிர்த்துவிட்டார். 

இந்த சம்பவத்தைத்தான் இப்போது திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் ‘நீங்கள் ஏன் இந்த ஆட்சியை கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்களே! கவிழ்க்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட முடியுமா?’ என்று பேசினார். 

இதன் மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் விலை போக தயாரானதை வெளிப்படையாகவே கொட்டிவிட்டார்.” என்று நீள்கிறது. 

இனியும் சொல்லுவீங்க?...’அசமந்த அரசியல் செய்கிறார் ஸ்டாலின்!’ என்று?