admk mla didnt response edappadi says dindidul

தமிழக சட்டப் பேரவைக்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போது எந்த எம்எல்ஏ வும் எழுந்து நின்ற அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேதனை தெரிவித்தார்.

மதுரையில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் கால்கோள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் என்று தெரிவித்த சீனிவாசன், எங்களுக்குள் பிரிவு என்பதே இல்லை என கூறினார். 122 எம்எல்ஏக்களும் நண்பர்கள் எனவும் அவர் கூறினார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவைக்குள் வரும்போது, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதாக குறிப்பிட்ட திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவைக்குள் வரும்போது அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் எழுந்து நின்று மரியாதை செய்வதில்லை என வேதளை தெரிவித்தார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தோழமைக்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் வெளிநடப்பு செய்துள்ளார்களே என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், அவர்களுக்கு அவசரமா வந்திருக்கும் வெளியே போயிருப்பார்கள் என கிண்டல் பண்ணினார்.