அமைச்சர் செல்லூர் ராஜூவை ’இவர் சசிகலாவின் கையாளா?’ எனும் சந்தேக கோணத்திலேயே அ.தி.மு.க.வின் தலைமை எப்போதுமே பார்க்கிறது. அதற்கு ஏற்றார் போலத்தான் ராஜூவும் வார்த்தைகளை விடுவதும், சம்பவங்களை நிகழ்த்துவதுமாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மதுரையில் நடந்திருக்கும் சம்பவம் ஒன்று எடப்பாடி & பன்னீர் இருவரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு போய் வைத்துள்ளது. 

விவகாரம் என்ன?...

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சமீபத்தில் சொசைட்டி எலெக்‌ஷன் நடந்தது. இதில் தலைவர் பதவியை அ.தி.மு.க.வை சேர்ந்த ரவிச்சந்திரன் பிடிக்க, யாருமே எதிர்பாராமல் துணை தலைவர் பதவியை டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வை சேர்ந்த மேலூர் கதிரேசன் என்பவர் தட்டிச் சென்றது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதிலும் தினகரனின் ஆளோ, போட்டியே இல்லாமல் இந்தப் பதவியை பிடிக்க, மதுரையையே ஆரவாரத்தில் தெறிக்கவிட்டுள்ளது தினா கோஷ்டி. 

இந்த நிலையில் ‘துணைத்தலைவர் பதவி பறிபோனதுக்கு காரணம், அமைச்சர் செல்லூர் ராஜூவின் உள்ளடி வேலைதான். துரோகியாகிவிட்டார்!’ என்று தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளார் மதுரையை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கம். 


”அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சொஸைட்டிக்கு பதினேழு இயக்குநர்கள் பதவி இருக்குதுண்ணே. இதுல ஒன்பது பதவிகளை நாங்க (அ.தி.மு.க.) பிடிக்க, விஷக்க்கிருமி தினகரன் தரப்போ நாலு பதவிகளையும், கரும்பு விவசாயிகள் சங்கம் நாலு இடங்களையும் பிடிச்சாங்க. 

தலைவர் பதவியில எங்க கட்சி ஆளு ரவிச்சந்திரன் வந்து ஒக்காந்துட்டாரு. துணைத்தலைவர் பதவியை மேலூரை சேர்ந்த எங்க கட்சிக்காரர் ஒருத்தருக்குன்னும் பேசி வெச்சிருந்தோம். ஆனால் மனு தாக்கல் செய்யுறப்ப எங்க கட்சி இயக்குநர்கள் மூணு பேரு வராம ரூட்ட கொடுத்துட்டாய்ங்க. அதனால துணைத்தலைவர் பதவியை போட்டியே இல்லாம தினகரன் ஆளு கதிரேசன் தட்டிட்டு போயிட்டாப்ல. 


என்னய்யா நம்மாளுங்க இப்படிப் பண்ணிட்டாய்ங்களேன்னு விசாரிச்சா, அமைச்சர் செல்லூர் ராஜூவின் உத்தரவுப்படியே இந்த மூணு பேரும் வராம எஸ்கேப் ஆனது தெரிய வந்துச்சு. ஆக பின்னணியை நோண்டிப்பார்த்தால் தினகரன் கோஷ்டி ஜெயிக்கணும்னே திட்டம் போட்டு எங்க கட்சியை சேர்ந்தவங்களை போக வேண்டாமுன்னு செல்லூர்க்காரரு தடுத்திருக்கிறது புரிஞ்சுது. 

அவரு இப்பவும் சசிகலாவைதான் தன்னோட தலைவியா நினைச்சுட்டு இருக்கிறாரு. அதனாலதான் ‘எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை ஒரு பெண் வழிநடத்துவார்’ன்னு தைரியமா வெளிப்படையாவே பேசுறார். தன்னோட விசுவாசத்தை காட்டுறதுக்காகவே இப்படியான பதவிகளை சசி, தினகரன் கோஷ்டிக்கு வாங்கிக் கொடுத்துட்டு இருக்கிறார். 

தினகரனுக்காக, சொந்த கட்சியும், தனக்கு சோறு போடும் கட்சியுமான அ.தி.மு.க.வுக்கே ஆப்படிச்ச செல்லூர்க்காரர் மேலே நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்திருக்கோம்.” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

ஆனால் செல்லூர் ராஜூவோ “அபாண்டமா என் மேலே புகார் சொல்றாய்ங்க. எனக்கும் அந்த தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைவர் பதவியை பிடித்திருக்கும் ரவிச்சந்திரன் எனக்கு போன் போட்டு, பதவியேற்பு விழாவுக்கு அழைச்சார். நானும் போனேன். அவ்வளவுதான். இப்படியெல்லாம் வதந்தி பரப்பி என்னை அசிங்கப்படுத்த வேண்டாம்.” என்றிருக்கிறார்.  கத்திரிக்காய் முற்றாமலா போயிடும்?