சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் இறப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்துடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று கூறி நடராஜன் மறைவுக்க அஞ்சலி செலுத்தாமல் அமைச்சர்கள் புறக்கணித்தனர். 

இந்த நிலையில் அமைச்சர் மணிகண்டனின் தந்தையும், மாவட்ட அவைத் தலைவருமான செ.முருகேசன், நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுதம் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் செ.முருகேசன். இவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் தந்தையாவர். ராமநாதபுரத்தில் முன்னாள் வாரியத் தலைவர் ஜி.முனுசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் பரமக்குடி முத்தையா, முதுகுளத்தூர் முருகேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தினகரன் அணிக்கு சென்று விட்டனர். இதனால் அமைச்சர் மணிகண்டன், அதிமுகவில் தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று
வலியுறுத்தி வருகிறாராம்.

அவ்வப்போது கட்சியின் பொதுக்கூட்டங்களிலும், ஊழியர் கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர் மணிகண்டன், தினகரன் அணிக்கு சென்றவர்களைத் தரக்குறைவாக பேசி வருகிறார். தினகரன் அணியினர் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் அதை அதிமுகவினர் உருவுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று தினகரன் அணியினருக்கு எதிராக பேசி வருகிறார்.

இந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20 ஆம் தேதி காலமானார். நடராஜன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். ஆனால், அதிமுக அமைச்சர்கள் யாரும் நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவோ, அஞ்சலி
செலுத்தவோ இல்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ, சசிகலா குடும்பத்துடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என அறிவித்துவிட்ட நிலையில் எப்படி அஞ்சலி செலுத்துவது என்று செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் தந்தையும், ராமநாதபுர மாவட்ட அதிமுக அவைத்
தலைவருமான செ.முருகேசன், நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

தினகரன் அணியினருக்கு எதிராக கருத்து கூறி வரும் அமைச்சர் மணிகண்டன், நடராஜனின் மறைவுக்கு அவரது தந்தை அஞ்சலி செலுத்த சென்றதன் மூலம் சசிகலாவுக்கு ஆதரவான மனநிலையில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.