தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காணாமல்  போயிருக்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டித் தொகுதிக்கு அக். 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் சி.வி. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவி சண்முகம் பங்கேற்று பேசினார்.
“தற்போது நாம்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இன்று அம்மா ஆட்சி இன்று நடைபெற தேமுதிகதான் காரணம். 2011-ல்  நீங்கள் அமைத்து கொடுத்த அடித்தளம்தான் காரணம் என்பதை நாங்கள் மறக்கவில்லை. 2011-ல் அதிமுக - தேமுதிக கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. அப்போது இக்கூட்டணி தொடர வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த எல்லோருமே தலைமையிடம் கூறினோம். அதை ஏற்றுக்கொண்டு அம்மா அவர்கள் கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம் என்றால் அதற்கு தேமுதிக தொண்டர்களின் உழைப்புதான் காரணம். 
அதிமுக - தேமுதிக கூட்டணி முறிந்திருந்தபோதும் உங்கள் தலைவரை தரக்குறைவாக நாங்கள் விமர்சித்தது கிடையாது. அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை செய்திருக்கிறோ. தனிப்பட்ட முறையில் விமர்சித்தது கிடையாது. விஜயகாந்த்தை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். இன்று அவர் மட்டும்  நல்ல உடல்நிலையோடு இருந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலையே மாறியிருக்கும். ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்.  தேமுதிகவினரின் பலம் எங்களுக்குத் தெரியும். உங்கள் பலத்தை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். இந்தத் தேர்தல்தான் நமக்கெல்லாம் கடைசி வாய்ப்பு. இந்தத் தேர்தலில் நாம் ஏமார்ந்துவிட்டால் உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பிறகு வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்” என சி.வி. சண்முகம் பேசினார். 
விழுப்புரம் மாவட்டத்தில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. 2011-ல் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இந்த மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல 2006-ல் விழுப்புரம் அருகே உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரத்தில் உள்ள தேமுதிகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு உதவும் என்ற அடிப்படையில்தான், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆதரவு கேட்டார்கள். இந்நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகம் தேமுதிகவினருக்கு ஐஸ் வைக்கும் வகையில் பேசியிருக்கிறார்.