விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த ராதாமணி உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவருகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிட்டனர். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும் போட்டி என்னவோ திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. தங்கள் வசமிருந்த விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைக்கும் தீவிரத்தில் திமுகவும் ஆளுங்கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை உணர்த்தும் முனைப்பில் அதிமுகவும் இந்த தேர்தலை எதிர்கொண்டன. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அத்தொகுதியில் அதிமுகவே முன்னிலை வகித்துவருகிறது. 7வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் (நடந்தபோது)போது, அதிமுக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகளை கடந்துவிட்ட நிலையில், திமுக வேட்பாளர் புகழேந்தி 29, 454 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகிலிருந்து கடந்த இரண்டரை ஆண்டுக்கும் மேலாக, முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்திடும், நாளைக்கு கவிழ்ந்துடும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்பு காட்டிவரும் நிலையில், பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழவும் இல்லை; திமுகவால் கவிழ்க்கவும் முடியவில்லை. 

திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சிக்க விமர்சிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வலுவாவதுடன் ஆயுளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மாறாக, திமுக தான் வலுவிழந்துகொண்டே செல்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் அதிமுக ஆட்சி கவிழுந்துவிடும் என்றனர். ஆனால் பல நெருக்கடிகளுக்கு இடையிலும் 9 தொகுதிகளை வென்றது அதிமுக. 

இப்போது, தங்கள் வசமிருந்த விக்கிரவாண்டியையும் இழக்கவுள்ளது திமுக. இந்த தொகுதியை அதிமுக பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிமுக விக்கிரவாண்டியை பிடித்துவிட்டால், அதிமுகவிற்கு அது மிகப்பெரிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும். அதேநேரத்தில் ஸ்டாலினின் தலைமை மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம், வியூகம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும். 

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசமிருந்த நாங்குநேரியிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.