அடுத்த தலைவர் பற்றியெல்லாம் என்றைக்குமே நான் கனவு கண்டதில்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த அவரிடம், அ.தி.மு.க. அடுத்த தலைவராகும் எண்ணம் உங்களுக்கு உண்டா? என்கிற கேள்விக்கு, ’’மக்களவைக்கு நான் தேனி தொகுதி உறுப்பினராக சென்றிருக்கிறேன். அடுத்து என்னுடைய செயல்பாடு என்னவென்றால் பிரசாரத்தின்போது சொன்னதுபடி தேனி மக்களவை தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக கொண்டு வருவேன்.

அதற்கு மேலாக நீங்கள் கேட்டதுபோல் அடுத்த தலைவர் பற்றியெல்லாம் என்றைக்குமே நான் கனவு கண்டதில்லை. என்னுடைய செயல்பாட்டை நான் சிறப்பாக செய்வேன்’’ என அவர் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் வென்றவர் ரவீந்திரநாத். ஆகையால் அவர் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஓ.பி.எஸ்- எடப்பாடி என இரட்டைத்தலைமை உள்ளதால், ஓ.பிஎஸின் வாரிசு அரசியலாக ரவீந்திரநாத் உருவெடுப்பார் என கருதப்பட்ட நிலையில், அதிமுக தலைவர் பதவி குறித்து தான் கனவு கண்டதில்லை என தற்போதைய ஆருடத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.