மேயர், நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், அந்தப் பதவிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்கள், கவுன்சிலர் பதவியைப் பிடிப்பதில் இப்போதே போட்டியைத்தொடங்கியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு அதிமுக சார்பில் கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு பேட்டி அளிக்கத் தொடங்கிய நிலையில், ஆளுங்கட்சி இந்தப் பதவிகளுக்கு மறைமுகமாகத் தேர்தல் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து இந்தப் பதவிகளுக்கு விருப்ப மனுவுடன் கட்டணம் அளித்தவர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளவும் அக்கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது.


இந்நிலையில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள், அந்தப் பதவியை பெற வேண்டுமென்றால், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கவுன்சிலர் பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கவுன்சிலர் பதவிகளில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். மேயர் உள்ளிட்ட தலைவர் பொறுப்புகளை பெறும் வகையில் தங்களுக்கு சாதகமான வார்டுகளைத் தேடிவருகிறார்கள்.


இதற்கிடையே மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி பதவிகளுக்கு விண்ணப்பித்து விருப்ப மனுவை திரும்ப பெற்றவர்கள் வார்டு தேர்தலில் போட்டியிட வசதியாக அதிமுகவில் அவர்களுடைய விருப்ப மனுக்களும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களின் எண்ணிக்கையும் அதிமுகவில் கூடிவருகிறது. தாரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் மாநகராட்சியில் 562 பேர் கவுன்சிலர் பதவிகளுக்கும் 55 பேர் மேயர் பதவிக்கும் விருப்ப மனு அளித்திருந்தார்கள். தற்போது 55 பேருடைய விருப்ப மனுக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு சேர்க்கப்பட்டுவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வார்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. வார்டு தேர்தலில் போட்டியிடுவோரை மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்வார்கள் என்பதால், மாவட்ட செயலாளரைச் சுற்றி அதிமுகவினர் வரத் தொடங்கியுள்ளனர். மா.செ.க்களை கவரும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கும் முன்பே அதிமுக முகாம் சுறுசுறுப்படைந்துள்ளது.