ஆம்! ஜெயலலிதா இறந்த பின் அ.தி.மு.க சிதறு தேங்காயாக உடைந்திருக்கிறது. தினகரனின் கைங்கர்யத்தில் அ.ம.மு.க., பேபிம்மா தீபாவின் முயற்சியால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை! என்று ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த கட்சிகளும், இது போக சசியின் தம்பி திவாகரன், தீபாவின் கணவர் மாதவன், சசியின் இன்னொரு தம்பி பாஸ்கரன் ஆகியோர் தங்களது இஷ்டத்துக்கு ஆளுக்கொரு கிளையை அ.தி.மு.க.வில் உருவாகி இருக்கிறார்கள்.

இதுபோக, பன்னீர்செல்வம் உருவாக்கிய ‘தர்மயுத்தம்’ அணி என்னதான் எடப்பாடி பழனிசாமி அணியோடு இணைந்துவிட்டாலும் கூட, இன்னமும் உள்ளுக்குள்ளே தனி அணியாகதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கப்போனால் அ.தி.மு.க. எனும் ஆலமரத்தினை பிடித்து  இத்தனை விழுதுகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதுவரையில் இந்த அணிகளுக்கு இடையில் ஆங்காங்கே பரவலாக சில அடிதடிகளும், நிறைய வார்த்தை மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆளும் அணிக்குள்  தேர்தல் நேரத்தில் ’யாருக்கு சீட், எந்த தொகுதியில் யார் நிற்பது, கூட்டணி கட்சிக்கு எதை ஒதுக்க வேண்டும்?’ என்பதில் நிச்சயம் பெரிய சண்டை ஏற்படும் என்று பல நாட்களாகவே கணிப்பு விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.

இதை மெய்ப்பிக்கும் விதமாக திண்டுக்கல்லில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி. உதயகுமார், மாஜி அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர்  மேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பல விஷயங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால்  தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பஞ்சாயத்தை கிளப்பினர். வேலைவாய்ப்பு விஷயங்களில் தங்கள் சிபாரிசுக்கு மதிப்பே கொடுக்கப்படுவதில்லை என குமுறினர். திண்டுக்கல்லார் என்ன சொல்லியும் இவர்கள் அடங்கவில்லை.

ஒரு கட்டத்தில் தொப்பம்பட்டிக்காரர்கள் எழுந்து ‘எங்களோட கோரிக்கையை ஏத்துக்கமாட்டீங்க, செஞ்சு கொடுக்க மாட்டீங்க. ஆனா எங்களை கட்சி வேலையில சக்கையா பிழிவீங்க! உங்களுக்காக உழைக்கணும் ஆனா கூலி கிடையாது அப்படித்தானே அமைச்சரே!’ என்று எகிறிவிட, மேலிருந்த அமைச்சர் அண்ட்கோ பதிலுக்கு திட்ட பெரும் ரகளையாகிவிட்டது. நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர் திடீரென.

இந்த விவகாரம் உடனடியாக முதல்வர் காதுகளுக்கு போக, அவர் தலையில் தட்டிக் கொண்டாராம்  எரிச்சலில்.

ஆக திண்டுக்கல்லில் திரி கிள்ளப்பட்டிருக்கும் இந்த பட்டாசு தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்ட அ.தி.மு.க.விலும் வெடிக்கப்போவதில் சந்தேகமில்லை.

‘ஏலே அவன் வேட்டிய உருவுலே! உடைங்கடா அந்த பசங்க மண்டைய! அந்தாளு சட்டைய கிழிச்சு ரோட்டுல வுட்டு அடிங்கண்ணோவ்! என்று எல்லா மண்டலங்களிலும் இனி காங்கிரஸ் ஸ்டைலை அ.தி.மு.க. கையிலெடுக்கப் போவது உறுதி! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆக மீடியாவுக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட் இருக்குது