ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் கே.சி. பழனிச்சாமியும் ஒருவர். அணிகள் இணைப்புக்கு பிறகு பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், கட்டம் கட்டப்பட்டு அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார். அண்மையில் அவர் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
 “ஓ.பன்னீர்செல்வம் தர்மம் யுத்தம் நடத்தியபோது அவரிடம் கண்ணப்பனை அழைத்து சென்றதே நான்தான். கண்ணப்பன் மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னாள் சென்ற யாருமே அவரால் பலனடையவில்லை. கண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் போன்றோருக்கும் மதிப்பில்லை. பன்னீர்செல்வத்தோடு சென்று பலனடைந்தவர்கள் பி.எச். பாண்டியனும் கே.பி. முனுசாமி மட்டுமே. அவரை நம்பி வந்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு 10-க்கும் மேற்பட்ட எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். தற்போது அறிவிக்கப்பட்ட அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ்-ஸை நம்பி வந்த யாருக்குமே சீட்டு கிடைக்கவில்லை. மாறாக, அவருடைய மகன் ரவீந்திரநாத்துக்கு தேனியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தனக்கு சீட்டு கிடைக்காததால் கண்ணப்பன் அதிமுக முகாமிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து கே.சி.பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.