தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களுக்காக அனைத்து கட்சி எம்பிக்களும் ஒன்று சேர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதைதொடர்ந்து இன்று 2வது நாளாக மாநிலங்களவை கூட்டம் கூடியது.

அப்போது, தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என எம்பிக்கள் ரங்கராஜன் (சிபிஐ), கனிமொழி (திமுக), டி.ராஜா (சிபிஎம்) மற்றும் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இதுபற்றிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். ஆனால், இதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதையோ, எப்போது அந்த முடிவு அறிவிக்கப்படும் என்பதையோ அவர் கூறவில்லை.

இதனால், சபாநாயகர் இருக்கையை தமிழக எம்பிக்கள் முற்றுகையிட்டனர். நீட் தேர்வில் வடமாநில மாணவர்களுக்கு சுலபமான கேள்விகள் கேட்கப்பட்டன. தென் மாநில மாணவர்களுக்கு கடினமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். இதற்கு உடனடியாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்து கட்சி எம்பிக்களும் ஒரே குரலில் கோஷமிட்டனர்.

அதற்கு, நீட் தேர்வு குறித்து குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதுபற்றிய பதில் வரவில்லை என சபாநாயகர் தெரிவித்தார்.