நீண்ட நாள் இழுபறிக்குப் பின்பு அதிமுக – பாஜக – பாமக  கூட்டணி  தற்போது அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சென்னை வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதே போல் அதிமுக – பாமக இடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதற்கும் அதிமுக ஒப்புக் கொண்டது. 

கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஆன நிலையில், தொகுதித் தேர்வு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் பாஜக மும்முரமாகியுள்ளது.

இதனிடையே அதிமுகவும், பாஜகவும் கூட்டணி குறித்து பேசும்போது  முதலமைச்சர் எடப்பாடி பேழனிசாமி முக்கியமான கண்டிஷன்  ஒன்றைப் போட்டுள்ளார். இந்தத் தேர்தலில் எச்.ராஜா தமிழகத்தில் போட்டியிடக்கூடாது என்று  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது பா.ஜ.க கூட்டணி ஏற்கெனவே உறுதியானதுதான்.  இந்தத் தேர்தலில் போட்டியிட எச்.ராஜா விரும்பி இருந்தார். அக்கட்சியின் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டது.  ஆனால் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வந்த பியூஷ் கோயலிடம், எச்.ராஜாவுக்கு தமிழகத்தில் இருக்கும் `செல்வாக்கு' குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. 

சாரணர் இயக்கத் தேர்தல் தோல்வி, ஆர்.கே நகர் தோல்வி, பெண் ஊடகவியலாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு, நீதிமன்றத்தை சர்ச்சையாகப் பேசியது என அவர்மீது புகார் பட்டியல்  கொடுக்கப்பட்டது.

இதை பாஜக  தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதையடுத்து எச்,ராஜாவை சமாளிக்கும் விதமான அவருக்கு மாநிலங்களவை  எம்.பி பதவி தருவதாக கட்சித் தலைமை வாக்குறுதி கொடுத்திருக்கிறது.  இந்த களேபரத்தில் தான் நேற்று கூட்டணி பேச்சு வார்த்தையின்போது அனைத்து தமிழக பாஜக தலைவர்களும் ஆஜராகி இருந்த நிலையில் எச.ராஜா மட்டும் எஸ்கேப்பாகிவிட்டார்.