admk banner without jayalalitha photos
அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து அந்த அறிவிப்பு வந்து சுமார் நான்கு வருடங்கள் இருக்கும். அதை கேள்விப்பட்டு அதிர்ந்தனர் அ.தி.மு.க.வினர். முதல் நாள் ஜெயா நியூஸ் சேனலிலும், மறுநாள் நமது எம்.ஜி.ஆர். பேப்பரிலுமாக வந்து ரத்தத்தின் ரத்தங்களை ரத்தம் சூடேற (வெளியே தெரியாமல்) வைத்த அறிவிப்பு இதுதான்...
‘’இனி அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் தரும் பத்திரிக்கை விளம்பரங்களிலும், வைக்கும் பதாகைகளிலும், சுவரொட்டிகளிலும், துண்டுப்பிரசுரங்களிலும் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும்.
வேறு யாருடைய புகைப்படமும் இருக்கக்கூடாது. உடனடியாக செயலபடுத்தப்படும் இந்த உத்தரவை கவனித்து நடந்து கொள்ளும் படி கழகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்பதே.

இந்த அறிவிப்பினால் கலங்கிப்போயினர் அனைத்து தரப்பு அ.தி.மு.க.வினரும். காரணம்?...பிளக்ஸ் வைக்கும், விளம்பரம் கொடுக்கும் ஒரு கட்சிக்காரன், தலைவர்களின் படத்தை போட்டு கூடவே தன் படத்தையும் போடவே விரும்புவான். காரணம், இப்படித்தான் தன் ஏரியாவில், மாவட்டத்தில், மாநிலத்தில் அவர் வளர முடியும், பிரபலப்பட முடியும்.
ஆயிரம் ஆயிரமாகவும், லட்சக்கணக்கிலும் செலவு செய்து விளம்பரங்களும், நோட்டீஸ்களும், ஃபிளக்ஸ்களும் தயார் செய்பவன் அதில் தன்னுடைய புகைப்படமே இருக்க கூடாது என்றால் அந்த செலவை செய்திட அவனுக்கு எப்படி மனம் வரும்? இது போக இந்த உத்தரவினால் தன் தொகுதியில் தான் எப்படி வளர்வது என்கிற குழப்பமும் அக்கட்சியினரை போட்டு தின்றது.
ஆனால் என்ன பண்ணிவிட முடியும்? தலைமை கழகம் சொல்கிறதென்றால் அது அம்மாவின் உத்தரவு. அம்மா சொன்ன பிறகு மறு பேச்சு ஏது! உள்ளுக்குள் முனகினாலும் அந்த உத்தரவுப்படியே நடந்தனர் அக்கட்சியினர். அள்ளியள்ளி செலவு செய்து விளம்பரம் செய்தாலும் தங்கள் போட்டோவை ஸ்டாம்ப் சைஸ் கூட போட்டுக் கொள்ள முடியாத துயரம் அவர்களை கடுப்பேற்றியது. மீறி யாராவது சின்னதாக தன் படத்தை போட்டுக் கொண்டாலும் கூட எதிர்கோஷ்டி அதை புகாராக்கி தலைமைக்கு அனுப்பி இவரது பதவியையே காலி செய்தது.

தலைமையின் அதிகாரம் கிட்டத்தட்ட சர்வாதிகாரமாக இருந்த அ.தி.மு.க.வில் இன்று சூழல் எப்படியிருக்கிறது தெரியுமா?...ஜெயலலிதாவின் படத்தை ஸ்டாம்ப் சைஸில் கூட போடாமல் ஆளுயர பதாகைகள் அமைக்குமளவுக்கு நிலவரம் தலைகீழ் மாறிக்கிடக்கிறது. அதுவும் எடப்பாடியும் முழு உயர புகைப்படத்தை போட்டு லைஃப் சைஸ் கட் அவுட் தயாரிப்பவர்கள் அதில் ஜெ., படத்தை மறந்தும் கூட போடுவதில்லை எனும் மேனியா உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் மக்கள் நலத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க ஈரோடு வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை வரவேற்றுத்தான் இந்த மாதிரி ஷாக் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர் ஈரோடு மாநகரம் மற்றும் புறநகர் மாவட்ட கழகத்தினர்.

இந்த இடத்தில் இரண்டு கேள்விகள்...
* ஜெயலலிதாவின் போட்டோவே இல்லாமல் கட் அவுட் வைக்குமளவுக்கு போய்விட்டீர்களே, உங்கள் படங்களை போட்டுக்கொள்ள அவர் தடை விதித்ததற்காக இப்போது பழிவாங்கி சந்தோஷப்படத்தான் இந்த ஏற்பாடா?
* நடப்பது எடப்பாடியின் ஆட்சியல்ல, அம்மாவின் ஆட்சி என்று வாய்க்கு வாய் கூறும் எடப்பாடி அணியினர், அது உண்மையென்றால் இப்படியொரு அத்துமீறலை தடுக்காதது, தட்டிக்கேட்காதது ஏன்?

* அல்லது ஜெயலலிதாவின் பிம்பம் இல்லாமலேயே ஆட்சியையும், கட்சியையும் கொண்டு போய்விடலாமென்று புது ரூட் பிடிக்கிறதா எடப்பாடி அணி?
பதில் சொல்வார் யாரோ?!
தற்போது நடக்கும் இந்த சூழல் அம்மா காட்டிய முதல்வருக்கும், சித்தி காட்டிய முதல்வருக்கும் இதுதான் வித்தியாசம் போல என அதிமுக தொண்டர்களின் மைண்ட் வாய்சாக இருக்கிறது.
