அடுத்த ஆண்டு மே மாதம் மத்தியில், பா.ஜ., அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது. நாடாளுமன்ற  தேர்தலை சந்திக்க, பாஜக , காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக  தனித்து போட்டியா அல்லது பாஜக , பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியா என கடும் குழப்பத்தில் உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகளை சேர்ப்பது பற்றி, முடிவு செய்வோம் என, தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடும் என்பதால், தேர்தலுக்கு பின், பாஜகவை ஆதரிக்கலாம் என முடிவு செய்து வைத்திருந்தாக கூறப்படுகிறது

ஆனால், பாஜக தரப்போ, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளது. அதனால் தான், 'குட்கா' வழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது. 
சி.பி.ஐ., நடத்திவரும், அந்த வழக்கு விசாரணை, அமைச்சரையும் தாண்டி செல்லும் என்பதால், ஆளும் கட்சி அதிர்ந்து போய் உள்ளது. எனவே, பாஜகவை  பகைத்து, தேர்தலை சந்திக்க முடியாத இக்கட்டில், அதிமுக  உள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி காய் நகர்த்தும், பாஜக  கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் முதல்கட்டமாக அதிமுகவுக்கு 25 தொகுதிகளும். பாஜகவுக்கு 15 தொகுதிகளும் என திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

தமிழகத்தில் பாஜகவுடன்  இணக்கமாக உள்ள, புதிய தமிழகம் உள்ளிட்ட, சில கட்சிகளுக்கு உள் ஒதுக்கீடாக, அவற்றில் சிலவற்றை, பாஜக  வழங்கும் என்றும் .மீதமுள்ள, 25 தொகுதிகளில்,அ.தி.மு.க., போட்டியிட வேண்டும் என அமித்ஷா  ஆணையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு முன்பு அதிமுக - அமமுக கட்சிகளை இணைத்து விட வேண்டும் என்று பாஜக பிளான் பண்ணி வருகிறது. இது தொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் பேசி முடித்துவிட்டதாகவும், தினகரன் ஒத்துவராவிட்டால் அவரை கழற்றிவிட்டு இணைப்பு விழாவை நடத்தவும் பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை சசிகலா, தினகரன் என இருவரும் இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அமமுகவையே கழற்றிவிட்டு, விட்டு தேர்தலை சந்திககவும் பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, தினகரனிடம் உள்ள ஓட்டுக்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்த ஆதரவு ஓட்டுக் களும், பிரதமர் மோடி எதிர்ப்பு ஓட்டுக்களும் தான்.ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் களில், செந்தில் பாலாஜியை தவிர, மீதமுள்ள, 17 எம்.எல்.ஏ.,க்களின் பின்னால் இருப்பது, அ.தி.மு.க.,ஓட்டுக்கள்தான். அவை  அ.தி.மு.க., வெற்றிக்கு உதவும். எனவே, அவர்களை மட்டும் சேர்த்தால் போதும்; கட்சிக்கு லாபம் என, பாஜக மற்றொரு கணக்கு போடப்பட்டு வருகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தினகரனை விட்டுவிட்டு, மற்ற எல்லாரையும் இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன .ஜனவரிக்குள், இப்பணியை முடித்து, பாஜக கூட்டணிக்கு, பச்சைக்கொடி காட்ட, அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருகிறது தகவல்கள் வெளியாகியுள்ளன.‘