அதிமுக கூட்டணியில் பல தொகுதிகளில் தோழமை கட்சிகள் ஒத்துழையாமை நடத்தி வருவதால் கூட்டணிக் கட்சிகள்  திணறி வருகின்றன. 

தென்மாவட்டத்தில் பாஜகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தில் களமிறங்கி இருக்கிறார். இதனால் அங்கு கூட்டணிக்கட்சிகள் ஒத்துழையாமை நடத்தி வருகின்றன. நீலகிரி தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கிவிட்டு கோவையை அதிமுக வசம் வைத்துக் கொள்ள நினைத்தார் அமைச்சர் வேலுமணி. கோவை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுகின்றனர். 

தி.மு.க.வை எதிர்க்கும் 6 தொகுதிகளுடன், உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க. போட்டியிடும் விழுப்புரத்தை தீவிரமாக குறி வைத்துள்ளது பாமக. விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்க அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஒத்துழைப்பு அவசியம். டாக்டர் ராமதாஸ் இதை எதிர்பார்க்கும் நிலையிலும், லோக்கல் அ.தி.மு.கவினர் சிறுத்தைகளைப் போலவே பா.ம.க.வையும் எதிரியாகப் பார்த்து வருகின்றனர்.

 

வன்னியர் வாக்கு வங்கி ஒரு லட்சமே உள்ள திண்டுக்கல்லில் பா.ம.க.வுக்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. கட்சி தொண்டர்கள் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் சுதீசுக்கு வேலைப்பார்க்க கிளம்பி விட்டனர். இதனால் வடசென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் பா.ம.க. தொண்டர்கள் தேர்தல் பணியாற்றவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம், பிரேமலதாவை நேரில் சந்தித்தும், பலனில்லை. தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளில் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற என பிரேமலதா உத்தரவிட்டு இருக்கிறாராம். 

ஓ.பி.எஸ்.சின் மகனுக்கு சீட் கொடுத்ததால் பலரும் வாரிசுகளுக்கு சீட் கேட்டனர். கிடைக்காததால் நிர்வாகிகள்ன் பரும் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததையும் அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே இணக்கமில்லை.