அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப் போட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, சோம்நாத் சட்டர்ஜி, ஏ.கே.போஸ் எம்எல்ஏ  உள்ளிட்டோர் மறைவுக்கு அரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுத் தந்தார்.

37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து, வரலாறு படைத்தார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது தான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அதற்காக நான் உள்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்க தயார்’ என்று தெரிவித்தார்..

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு அரசியல் பணிகள், கட்சி பணிகள், எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் சந்தித்து வெற்றி பெறும் வியூகம், ஜெயலலிதா வகுத்து தந்த அந்த வெற்றிப் பாதையில் பயணிப்பது இவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

.

தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு 6 மாதத்தில் 1.22 கோடி உறுப்பினர்களை பெற்ற மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்..

ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் தற்போதும் தொடருகிறது. அவரது திட்டங்கள் மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

எங்களோடு இணைந்து வருகிற தேசிய கட்சிகள் என்றாலும் சரி, மாநில கட்சிகள் என்றாலும் சரி, அவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை சந்திப்போம் என்றும்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்..