புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்துள்ளதாக முதல்வர் எடப்ப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

‘கஜா’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதில் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் திண்டுக்கல் சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின் ஆகியோரும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே முகாமிட்டுள்ள அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.