சூழலியலுக்கு ஆபத்தான திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங்களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை, அதானி குழுமம் வாங்கி தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது, அந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அதானி குழுமம்.  330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அதானி நிறுவனம் வெளிட்டுள்ள சூழல் தாக்க மதிப்பீட்டு  ஆய்வறிக்கையை ஆராய்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இத்திட்டதின் காரணமாக சூழலுக்கு பாதிப்புகளே அதிகமாக அமைய வாய்புள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழகம், ஆந்திர மாநிலங்களை சேர்ந்த சுமார் 82 மீனவர் கிராமங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிப்பதன் மூலம், நில ஆக்கிரமிப்பு, நில பயன்பாட்டில் மாற்றம், மீன் வளம் -மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு, சூழலியல் அபாயம், வெள்ள அபாயம், கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல்,  உயிர் பன்மைய அழிவு,  உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், நீர்நிலைகள் அழிவு, பழங்குடி மக்களுக்கான ஆபத்து என ஏராளமான பாதிப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கையை அழித்து உருவாக்கப்படும் ஒன்றுக்கு தான் வளர்ச்சித் திட்டங்கள் என்று பெயர் வைத்து அழைக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இன்றைக்கு பெரும்பாலும் இயற்கையை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றன கார்ப்பரேட்டுகள். அதற்கு ஆளும் அரசுகளும் துணை போகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவெள்ள பாதிப்புகளை சந்தித்தன. அந்த பாதிப்புகள் இன்றும் எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு பெரும்பாலும் காரணம், இயற்கையின் மீதான அழிப்பே என்பது தான் எதார்த்தமான ஒன்றாகும். தற்போது, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கப் பணிகள் மூலமாக மீண்டும் சென்னை ஒரு அபாயத்தை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் அதானி குழுமம் தற்போது இந்த திட்டத்தின் வாயிலாக மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து, பழங்குடி மீனவர்களின் வாழ்விடத்தை அழித்து, 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோவது கண்டிக்கத்தக்கது.

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத்திற்கு அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அந்த துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் காரணமாக மீனவர்கள், பொதுமக்கள் செய்து வரும் தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. இந்த சூழலில் துறைமுகத்தை விரிவாக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அது சொல்லொன்னா துயரங்களை ஏற்படுத்திவிடும்.

மக்களுக்கு இந்த திட்டத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு போதிய காலம் கொடுக்காமல் திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்துவரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கருத்து கூற அழைப்பு விடுப்பது பெரும் ஆபத்தில் முடிந்துவிடும். ஆகவே, இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு,  அதானியின் கொள்ளை லாப வெறிக்காக தமிழகத்தின் இயற்கை வளங்களை நாம் இழக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே இந்த திட்டத்தால் ஏற்படப்போகும் ஆபத்தை கருத்தில்கொண்டு இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும். திட்டத்தை தொடர அரசு அனுமதிக்கும் பட்சத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரும் தொடர் போராட்டத்தை நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.