‘சும்மா, ஸ்டைலா வந்துட்டு போகலாம் என்று நினைத்தால் மக்களின் ஆசிர்வாதம் கிடைக்காது’ என்று போகிறபோக்கில் ரஜினியையும் கமலையும் கலாய்த்திருக்கிறார் நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ.வுமான ரோஜா.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று அறிவித்தார் நடிகர் ரஜினி. இதேபோல யாரும் எதிர்பார்க்காத நிலையில், அதிமுக அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்துவந்த  நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அரசியலில் ஈடுபடபோவதாக நடிகர் ரஜினி அறிவித்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், அதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் கமல், ரஜினியின் அரசியல் வருகையைப் பற்றி ஆந்திரா எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கருத்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகத் தமிழில் வெளிவரும் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ள ரோஜா, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  ஆனால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் களத்துல இல்ல. அதனால, நம்ம வந்தா ஈஸியா ஆட்சியப் புடிச்சிடலாம்னு நெனச்சு வந்தா சுத்த வேஸ்ட். 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மாதிரி ஜனங்களுக்கு நல்லது பண்ணலாம்னு நினைக்கிறவங்களத்தான் மக்கள் ஆசிர்வாதம் பண்ணுவாங்க. சும்மா, ஸ்டைலா வந்துட்டுப் போகலாம்னு நெனச்சா அது முடியாது.” என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். தன் துறை சார்ந்தவர்கள் என்றாலும், அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ரோஜா இவ்வாறு கலாய்த்து பேட்டியளித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் ‘உழைப்பாளி’, ‘வீரா’ என இரு படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.