’கூட்டணி அமைப்பதற்கு முன்வரை பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்த ராமதாஸ் இன்று அதே பூஜ்யத்துடன் இணைந்து கேவலமான கூட்டணி அமைத்திருக்கிறார்’என்று பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான குஷ்பு.

 எதிர்க்கட்சிகளின் கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்த குஷ்பு,’’நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி  40 தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பே அதிகம். ஏற்கனவே 35 தொகுதிகள் என்று ஏன்  கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்றுதான். எதிர்தரப்பே இருக்கக் கூடாது என நினைக்கக் கூடாது அல்லவா?

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை அடிக்கடி காணலாம். இப்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்புதான் கட்சிக்காரர்களுக்கு இருந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது என்கிறபோது எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறேன். மந்திரி பதவி கிடைக்குமா என்கிற  கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்’ என்கிறார் குஷ்பு.