நாடளுமன்றத்தேர்தலில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே தேர்தல் பிரசாரம் தொடங்கியும் குஷ்பு பிரசாரம் பக்கமே தலை வைக்காமல் இருந்தார். தேர்தலில் சீட்டு கிடைக்காத காரணத்தால், குஷ்பு கோபத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் குஷ்பு, தேர்தலில் போட்டியிடாதது பற்றி பேசியிருக்கிறார்

.
''நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று சொன்னேனா? எனக்கு இதுபோன்ற வதந்திகள் புதிதில்லை. திமுகவில் இருக்கும்போது 2011-ல் இதே பேச்சு வந்தது. 2014, 2016 மற்றும் 2019 வரை இதே பேச்சு தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கு இது பழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சீட்டு கொடுக்கப்படவில்லை; அதனால் குஷ்பு வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். நான் எப்போது சீட்டு கேட்டேன்?திமுகவிலோ காங்கிரஸிலோ இதுவரை நான் சீட்டு கேட்டதேயில்லை

.
நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர். அது தொடர்பான பணிகளே நிறைய இருக்கின்றன. பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. தேசியப் பொறுப்பில் இருப்பதால் இந்தியா முழுவதும் சென்றுகொண்டிருக்கிறேன். அதற்காக நான் செல்லும் இடமெல்லாம், 'நானும் ஜெயிலுக்குப் போறேன்.. நானும் ஜெயிலுக்குப் போறேன்' என்று  தண்டோரா போட முடியாது. என்னைப் பற்றி கட்சிக்கு நன்றாகத்  தெரியும்.” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.