எடப்பாடி தனித்தன்மை உள்ளவராக இருக்கிறார் என்றும் நடிகர்களுகு ஓட்டு போடும் காலம் போய்விட்டது என்றும் நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ.வுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா உள்ளார். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு வருகை புரிந்தார். நகரி ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 “ அரசியலுக்கு இவர்கள் வரலாம். அவர்கள் வரக்கூடாது என்று சொல்ல முடியாது. யார் வேண்டு மானாலும் வரலாம். ஆனால், மக்கள் நம்பி ஓட்டு போட்டால்தான் முதல்வராக முடியும். மக்களுக்கு கஷ்டங்கள் வரும்போது, ‘நான் இருக்கிறேன்’ என ஓடிப் போய் உதவி செய்தால்தான் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க முடியும். சும்மா ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு பேட்டி கொடுத்தால், மக்கள் ஓடி வந்து தேர்தலில் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள். 
நடிகர்கள் என்றாலே மக்கள் ஓடிவந்து ஓட்டு போடும் காலம் போய் விட்டது.இப்போதெல்லாம்  நடிகராக இருந்தாலும் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் நன்றாக தெரிந்துகொள்கின்றனர். உண்மையில் மக்கள் புத்திசாலிகள். யாரை மேலே உட்கார வைக்க வேண்டும்; யாரை கீழே வைக்க வேண்டும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியல் நடவடிக்கைகளை பெரிதாக நான் கவனிப்பதில்லை. 
தற்போது முதல்வராக இருப்பவர் பதவிக்கு வரும்போது அவரை யார் என்றே தெரியாது. எதுவும் தெரியாதவர் போல் சாதாரணமாக வந்தார். இன்று தனித்தன்மை உள்ளவராக வளர்ந்துள்ளார். அதிமுக இல்லாமல் போய்விடும் என நினைத்தவர்களையே யோசிக்க வைத்துள்ளார். கட்சியில் எல்லோரையும் அரவணைத்து முன்னேறி வருகிறார். தமிழகத்தில் தலைவர்களுக்கான வெற்றிடம் இருக்கிறது என சொல்வது தவறு. வெற்றிடம் என ரஜினி ஏன் சொன்னார் என எனக்கு தெரியவில்லை.” என்று நடிகை ரோஜா தெரிவித்தார்.