சென்னை லீலா பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் விஜய் – ஸ்டாலின் சந்திப்ப எதேச்சையோக நடைபெற்றது அல்ல என்று பேச்சு அடிபடுகிறது.

திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகள் செல்வியின் பேத்திக்கு நேற்று முன் தினம் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆர்.ஏ புரத்தில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டலா லீலா பேலசில் மிகவும் ஆடம்பரமாக இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டது தான் ஹைலைட். 

கலைஞரின் மகள் செல்வி குடும்பம் – எஸ்.ஏ.சந்திரசேகர் -  ஷோபா தம்பதிக்கு மிகவும் நெருக்கம். மேலும் செல்வியின் குடும்ப உறுப்பினர்களும் விஜய் மற்றும் சங்கீதாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டுபவர்கள் என்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் விழாவிற்கு விஜயை குடும்பத்துடன் வருமாறு நேரில் சென்று செல்வி மற்றும் குடும்பத்தினர் அழைத்துள்ளனர். மேலும் முரசொலி செல்வமும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நெருக்கமான நண்பர். 

இந்த நிலையில் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு விஜய் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டார். ஆனால் ஸ்டாலின் சற்று தாமதமாக வந்ததாக சொல்கிறார்கள். இதனிடையே விஜய் வந்துள்ள தகவலை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்டாலின் லீலா பேலஸ் சென்றுள்ளார். இதே போல் ஸ்டாலின் வருகை குறித்து முன்கூட்டியே விஜய்க்கு சொல்லப்பட்டுள்ளது.

 

விஜயும் காத்திருந்து ஸ்டாலினை சந்தித்துவிட்டு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். அதன்படி ஸ்டாலின் வரும் போது சரியாக அங்கிருந்து எழுந்த விஜய், நேராக சென்று ஸ்டாலினின் கைகளை குலுக்கி நலம் விசாரித்துள்ளார். இதேபோல் அங்கிருந்த துரைமுருகனுக்கும் விஜய் கைகளை குலுக்கியுள்ளார். பரஸ்பரம் நலம் விசாரிப்புகளுடன் இந்த சந்திப்பு முடிந்துவிட்டாலும் இரு பெரும் பிரபலங்கள் ஒருங்கே சந்தித்துக் கொண்டதற்கு கண் காது  மூக்கு வைத்து பேச ஆரம்பித்துள்ளார்கள்.