பிகில் படத்தில் விஜய் காவி வேட்டி அணிந்து சிலுவை அணிந்திருப்பது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்த தேவையில்லை, விஜய் நல்ல நடிகர் என நடிகர் எஸ்.வி சேகர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கும் பாஜகவுக்கும் எப்போதும் ஏழரைப் பொருத்தம்.  விஜய் என்றாலே இப்போதும் பாஜகவினருக்கு எட்டிக் காய் கசப்பு என்ற நிலையே உள்ளது. அதற்கு காரணம்  அவர் எடுக்கும் படங்களில் மத்திய அரசை தாறுமாறாக விமர்சித்து வசனம் பேசுவார் என்பதுதான் அது. ஏற்கனவே சர்கார் படத்திலிருந்து பாஜகவினர் விஜய்மீது  ஏக கடுப்பில் இருந்துவரும் நிலையில் மீண்டும் அவர் மீது ஒரு விமர்சனம் எழுப்பியுள்ளனர்.

 

அதாவது  பிகில் பட போஸ்டரில் அவர் காவி உடை அணிந்து கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது போல காட்சி உள்ளது,  இதைத்தான் இப்போது சர்ச்சையாக்க  முயற்சிக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த முறை அவருக்கு ஆதவாக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே அவருக்கு குரல் கொடுத்திருப்பதுதான் அது. பாஜகவையோ அல்லது இந்துமதத்தையோ யாராவது எங்காவது தவறாக பேசிவிட்டால் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்குவதில் எச் ராஜாவுக்கு இணையானவர் எஸ்.வி சேகர் என்றால் அதையாரும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு யாராக இருந்தாலும் அவர் எந்த பதவியில் இருந்தாலும்  தைரியமாக விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்பக் கூடியவர் அவர். 

இந்நிலையில் பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ஆம்  தேதி ரிலீஸ்  ஆகும் என தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது.  படத்தை தயாரிக்க 180 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு,  அட்லி விஜய் கூட்டணியின் மூன்றாவது படமாகும்  பிகில் உருவாக்கப்பட்டு  ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் மூலம்  பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி தற்போது அதில் இருந்து மீண்டு ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் அவர் அணிந்துள்ள கருப்புச்சட்டை,  காவி கலர் வேட்டி,  கழுத்தில் சிலுவை... இப்படி பல  வித்தியாசமான முறையில் விஜய்யின் ஆடை ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரைப்போன்றே உடையணிந்து திரையரங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  ஆனால் அவர் காவி உடையணிந்து சிலுவை அணிந்திருப்பது சரிதானா அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பலர்  பாஜகவைச் சேர்ந்த  எஸ்.வி சேகரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதற்கு அவர்.  இதைப் பொருட்படுத்த தேவையே இல்லை... என்பது என் கருத்து,  விஜய் ஒரு நல்ல நடிகர் அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள்,  இதில் காவி வேட்டி, ருத்ராட்சம் கூட இருக்கின்றது,  இதை பெரிதுபடுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார். அதேபோன்று மற்றோரு டுவிட்டில் , விஜய் விபூதி பூசி நடித்தால் அவரை பாராட்டும் நாம் அவர் சிலுவை போட்டி நடித்தால் அதை ஏற்கவும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். எச்.ராஜா போன்றோர் விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறி கலாய்த்துவந்ததுடன் சமயம் கிடைத்தால் வச்சி செய்ய காத்திருக்கும் நிலையில் அவரைப்போலவை கருத்துடைய எஸ்.வி சேகர் நடிகர் விஜய்க்கு கரிசனமாக பேசி உள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.