கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட மாதங்களுக்கு பிறகு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.  மாநகரம் கைது என வித்தியாசமான கதையில் புகுந்து விளையாடிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் விஜய் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகி இருக்கவேண்டிய மாஸ்டர் திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதும் சிறப்பு காட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ள்ளதால் காலை 4:00 முதலே விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. சென்னை மட்டுமின்றி சேலம், நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று இரவு நள்ளிரவு முதல் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் கூட மாஸ்டர் படத்தை  திரையில் கண்டு ரசித்து வருகின்றனர். 

இந்நிலையில் மதுரை செல்லூரில் உள்ள திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை நடிகர் சூரி திரையரங்கில் அமர்ந்து ரசித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படத் துறையும் திரையரங்குகள் மட்டும் விதிவிலக்கல்ல. இன்று வெளியான விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மூலமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.

அதே சமயத்தில் கொரோனா குறித்து தமிழக அரசு வலியுறுத்தி வருகின்ற நடைமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களும் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.